
திருப்பத்தூரில் தடுப்பூசி போட்டதால் 2 வயதுக் குழந்தை உயிரிழந்ததாகவும், நீதி கேட்டு உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பத்தூர், வாணியம்பாடி அடுத்த பெருமாள் பேட்டை, ஊசி தோப்பு பகுதியைச் சேர்ந்த ஓட்டுநராக வேலை செய்யும் விக்னேஷ் - கிருத்திகா தம்பதியினரின் இரண்டு வயது மகன் பூமீஸ் என்ற குழந்தைக்கு அப்பகுதியில் உள்ள அங்கன்வாடியில் நேற்று நடைபெற்ற முகாமில் இரண்டு வயதிற்கான தடுப்பூசியைப் போட்டுள்ளனர்.
பின்னர், குழந்தையை உறங்க வைத்த நிலையில் குழந்தை எழாததால் இன்று அதிகாலை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தனர். அப்போது குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையின் குழந்தையின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்காமல் காவல்துறையினர் வேலூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக எடுத்துச் சென்றதைக் கண்டித்து வாணியம்பாடியில் இருந்து வேலூர் அடுக்கம்பாறை வரை சுமார் 70 கிலோ மீட்டர் ஆம்புலன்ஸை துரத்தி வந்த உறவினர்கள் தற்போது அடுக்கம்பாறை பகுதியில் ஆம்புலன்ஸை வழிமறித்து குழந்தையின் உடலைக் கேட்டும், தடுப்பூசி போட்டதால் குழந்தை உயிரிழந்ததாகக் கூறியும் இதற்கு உரிய நீதி வேண்டும் எனக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.