
திமுக அரசுபோல பொய் வாக்குறுதிகளை அளிக்க மாட்டோம் என்று தவெக தலைவர் விஜய் உறுதியளித்துள்ளார்.
நாமக்கலில் தவெக பிரசாரத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசுகையில்,
இந்த நாடி நரம்பெல்லாம் ரத்தம் பாய்ச்சுகிற வரிகளை எழுதிய நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, நாமக்கல்லை சேர்ந்தவர். அதேபோல, தமிழ்நாட்டு மக்களுக்கு இடஒதுக்கீடு உரிமையை வழங்கியதும் இதே நாமக்கல்லை சேர்ந்த சுப்பராயன்.
கம்யூனல் ஜிஓ 1701-ஐ கொண்டுவந்து, பட்டியலின மக்களுக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இடஒதுக்கீட்டை வழங்கியதால், முதல்வராகப் பதவியேற்றதும் சுப்பராயனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று வாக்குறுதி 456-ல் கொடுத்தது யார்? சொன்னார்களே, செய்தார்களா?
நாமக்கல் மாவட்டத்தில் அது செய்வோம், இது செய்வோம் என்று சொன்னார்களே..
ஒவ்வோர் ஒன்றியத்திலும் தானிய சேமிப்புக் கிடங்குகளும் அமைக்கப்படும். இவை உலர் கலன்களுடன் கூடிய கொள்முதல் நிலையங்களுடன் இணைக்கப்படும் என்று வாக்குறுதி 50.
கொப்பரைத் தேங்காயை தமிழக அரசே கொள்முதல் செய்யும். அதிலிருந்து தேங்காய் எண்ணெயை உற்பத்தி செய்து, நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் - வாக்குறுதி 66.
நியாய விலைக் கடைகளில் நாட்டுச் சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றை விநியோகம் செய்ய நடவடிக்கை - வாக்குறுதி 68.
போக்குவரத்து ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டம் - வாக்குறுதி 152.
இதெல்லாம் சொன்னார்களே, செய்தார்களா?
ஒரு நாளைக்கு 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு, உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படும் இந்த நாமக்கல்லில், முட்டைகளை வீணாகாமல் சேமிக்க சேமிப்புக் கிடங்கு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும், பாக்டீரியம் மற்றும் வைரலாஜிக்கல் பரிசோதனை மேற்கொள்ள ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பல ஆண்டுகளாக இருக்கிறது. ஆனால், இதுவரையில் எந்த கட்சிகளும் அதனை யோசிக்கவில்லை.
திமுக எம்எல்ஏவுக்கு சொந்தமான ஒரு மருத்துவக் கல்லூரியில் நடந்த கிட்னி திருட்டு - நாடறிந்த விஷயம். அதில் நாமக்கல்லை சேர்ந்தவர்கள்தான் அதிகளவில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக, விசைத் தறியில் பணிபுரியும் ஏழைப் பெண்களைக் குறிவைத்தே கிட்னி திருட்டு நடந்ததாகவும் கூறுகின்றனர்.
இதில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், நமது ஆட்சியில் கடுமையாகத் தண்டிக்கப்படுவர். இந்த கிட்னி திருட்டுக்கு ஆரம்பம் எங்கிருக்கிறது என்றால், கந்துவட்டிக் கொடுமையில்தான் இருக்கிறது.
விசைத்தறித் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தையும் பொருளாதாரத்தையும் இந்த ஏமாற்று மாடல் திமுக அரசு மேம்படுத்தாத காரணத்தினால்தான், தங்களின் கிட்னியையே விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது எவ்வளவு பெரிய கொடுமை?
விசைத்தறித் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்தத் தேவையான தீர்வுகளை, உறுதியாக எங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்வோம்.
அடிப்படை சாலை வசதி, குடிநீர் வசதி, மருத்துவ வசதி, பெண்கள் பாதுகாப்பு போன்ற அடிப்படை வசதிகளைத்தான் என்னிடம் கேட்கின்றனர். இவற்றில் எந்த சமரசமும் இல்லாமல் சரியாகச் செய்யப்படும் என்று சொன்னோம். இதைத்தானே எல்லாரும் சொன்னார்கள்; இவர் புதிதாய் என்ன சொல்லிவிட்டார்?
ஒரு மனிதனுக்கு உணவு, குடிநீர், கல்வி, மருத்துவ வசதி, போக்குவரத்து வசதி, சாலை வசதி, பாதுகாப்பான வாழ்க்கைதான் ஓர் அடிப்படைத் தேவை. என்றைக்கும் இது தேவைதானே. அப்படியென்றால், அதனைச் சொல்வதுதானே சரி.
அதனால்தான், எது நடைமுறைக்கு சாத்தியமோ உண்மையோ அதை மட்டும்தான் சொல்வோம்; அதனைத்தான் செய்வோம். திமுக மாதிரியான பொய்யான வாக்குறுதிகளைக் கொடுக்க மாட்டோம்.
செவ்வாய்க் கிரகத்தில் ஐடி கம்பெனிகள், காற்றில் கல் வீடுகள், அமெரிக்காவுக்கு ஒற்றையடிப் பாதை, வீட்டுக்குள்ளேயே விமானம் ஓட்டப்படும் என்று முதல்வர்போல அடித்து விடுவோமா?
ஏற்கெனவே சொன்னதுபோலத்தான், இந்த பாசிச பாஜகவோடு நாங்கள் ஒத்துப்போக மாட்டோம். திமுக அரசு மாதிரி, பாஜகவுடன் மறைமுக உறவுக்காரர்களாக இருக்க மாட்டோம்.
மூச்சுக்கு 300 முறை அம்மா அம்மா என்று சொல்லிக்கொண்டு, ஜெயலலிதா சொன்னதை முற்றிலும் மறந்துவிட்டு, தமிழ்நாட்டின் நலனுக்காக என்று ஒரு பொருந்தாக் கூட்டணியை அமைத்தவர்கள் போன்றும் இருக்க மாட்டோம்.
இந்த பாஜக அரசு, தமிழ்நாட்டுக்கு என்ன செய்து விட்டார்கள்? நீட் தேர்வை ஒழித்தார்களா? கல்வி நிதியை முழுவதுமாக கொடுத்தார்களா? தமிழ்நாட்டுக்குத் தேவையான அனைத்தையும் சரியாகச் செய்தார்களா? பிறகு ஏன் இந்த சந்தர்ப்பவாத கூட்டணி என்று புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் உண்மையான தொண்டர்கள் கேட்கின்றனர்.
அதிமுக - பாஜக நேரடி உறவுக்காரர்களின் மீது மக்களிடையே எந்தவொரு நம்பிக்கையும் இல்லை என்பது தெரியும். இந்த திமுக குடும்பமும், பாஜகவுடன் மறைமுக உறவுக்காரர்களாக இருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
வருகிற தேர்தலில், நீங்கள் திமுகவுக்கு வாக்களித்தால், அது பாஜகவுக்கு வாக்களித்த மாதிரி.
2026-ல் மாபெரும் மக்கள் சக்திகொண்ட எளியோரின் குரலாய் இருக்கிற தவெகவுக்கும், மக்களை ஏமாற்றிக் கொண்டு கொள்ளையடிக்கும் திமுகவுக்கும்தான் போட்டி.
இப்படியொரு மோசமான ஆட்சியைக் கொடுக்கிற திமுக அரசு மீண்டும் வேண்டுமா? உங்கள் உண்மையான மக்களாட்சி, மனசாட்சியுள்ள மக்களாட்சி தவெக ஆட்சியமைக்க வேண்டுமா?’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: 'பொறுத்திருக்க வேண்டும், நல்லதே நடக்கும்' - செங்கோட்டையன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.