முதலமைச்சரின் நட்பு வட்டாரங்களுக்கு வழங்கும் அரசுப் பணி நியமனங்கள் தொடர்பான அரசாணைகள் வெளியாகாமல் இருப்பது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று வெளியிட்ட விடியோவில், முதல்வர் ஜோசப் விஜய்யின் நெருங்கிய வட்டாரங்களுக்கு அரசுப் பணி வழங்குவதில் உள்ள வெளிப்படைத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் பேசியிருப்பதாவது:
“ஊரான் விட்டு நெய்யில் சொந்த வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீங்க சார் என்று விண்ணதிர வீரமுழக்கமிட்ட முதல்வர் விஜய், தனது பவர் சென்டர்களுக்கு தவெக அரசில் அரசுப் பணிகளை வழங்கி, தற்போது அரசாணையை வெளியிடாத மர்மம்தான் என்ன?
வெளிப்படையான அரசு நிர்வாகத்தை வழங்குவேன் என அறிவித்த முதல்வர் விஜய், த.வெ.க அரசில் தனது ஜோதிடர் ரத்தன் பண்டித் வெற்றிவேலுக்கு சிறப்பு அதிகாரி என்ற அரசு பணி வழங்கினார். அதற்கான அரசாணை வெளியானவுடன் பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் புயலை கிளப்பியது. இதையடுத்து அந்த அரசாணையை தமிழ்நாடு அரசு ரத்து செய்தது.
தொடர்ந்து, முதல்வர் விஜய்யின் வீயூக வகுப்பாளரான ஜான் ஆரோக்கியசாமி, நண்பர் விஷ்ணு ரெட்டி ஆகியோருக்கு முதல்வரின் ஆலோசகர்களாக அரசு சார்பில் நியமிக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் தாமதமாக மே 22 ஆம் தேதிதான் வெளியானது. இது தொடர்பான அரசாணை முறைப்படி வெளியிடப்படவில்லை. ஆனால் விஷ்ணு ரெட்டி, ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றனர் என செய்திகள் வெளியானது.
அதனைத் தொடர்ந்து முதல்வர் விஜய்யின் சமூக வலைதள அட்மின் ஜெகதீஷ் பழனிச்சாமி, ராம்குமார் ஆகியோர் முதல்வரின் நேர்முக உதவியாளராக பணி வழங்கப்பட்டுள்ளதாக நமக்கு எப்போது தெரிய வருகிறது என்றால், சமூக வலைதளங்களில் முதல்வர் விஜய்க்கு ஜெகதீஸ் பழனிச்சாமி பிறந்த நாள் வாழ்த்து பதிவிட்டபோதுதான் நாட்டு மக்களுக்கு அந்த செய்தி தெரிய வருகிறது.
ஆனால் நாமக்கல் கவிஞர் மாளிகையில் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்ற முதல்வர் விஜய் அலுவலகத்தில், ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி, ஜெகதீஷ் பழனிச்சாமி, ராம்குமார் ஆகிய நான்கு பேருக்கும் தனி அறைகள் ஒதுக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
தேர்தல் நேரத்தில் விஜய்க்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த நவீன் மூஸா, முதல்வர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் கூடவே செல்கிறார். ஆனால் இவருக்கு என்ன பணி வழங்கப்பட்டுள்ளது என்பது நமக்கு மட்டுமல்ல பாதுகாப்பில் இருக்கிற போலீஸாருக்கு இன்னும் தெரியவில்லை. உள்துறைகளும் இது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
முதல்வரின் சமூக வலைதள ரசிகர் மன்ற தலைவராக இருந்த குருவுக்கு தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பு குழுவின் தலைவராகவும், செய்தி மக்கள் தொடர்பு துறையில் உள்ள சமூக ஊடகப்பிரிவு சிறப்பு அதிகாரியாக த.வெ.க தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்த திவ்யாவும் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அரசாணைகள் வெளியிடப்படவில்லை.
முதல்வர் விஜய்க்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பதவிகள் குறித்த விவரம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள மர்மம்தான் நாட்டு மக்களுக்கு புரியவில்லை. முறையான நியாயமான தகுதி உள்ள சட்டரீதியான நியமனம் என்றால் அவற்றை ரகசியமாக வைக்க வேண்டிய அவசியம் என்ன?. அவருக்கு எல்லா அதிகாரமும் இருக்கிறது. தகுதியுள்ள யாரை வேண்டுமானாலும் சட்டப்படி நியமனம் செய்யலாம். அப்படி நியமனம் செய்யப்பட்ட அந்த அறிவிப்புகள் தொடர்பான அரசாணை வெளியிடுவதில் தயக்கம் ஏன்?
முதல்வர் விஜய்யின் கரூர்ப் பிரசாரக் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கிய அரசுப் பணிகள், தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடக் கூடாது என்று கவலை தெரிவித்த நீதிபதிகள், இதேபோன்று பேரிடர்களில் சிக்கி இறந்தவர்கள் குடும்பத்துக்கு அரசுப் பணி வழங்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்கள். அதேபோல இந்த முதலமைச்சர் நட்பு வட்டாரங்கள் பணிகளுக்கு நீதிமன்றத்தில் கேள்வியாக வந்து விடுவோ? என்கின்ற பயம்தான்.
அரசு பணியில் நியமிக்கப்பட்டவர்களின் தகுதி என்ன? உழைப்பு என்ன? தியாகம் என்ன? பின்புலம் என்ன என்பதெல்லாம் கேள்வியாக வருகிறபோது ஒரே பதில் நாங்கள் விஜய்யின் நட்பு வட்டாரத்தில், சுற்றுவட்டாரத்தில், நெருக்கமாக இருக்கிறோம்.
முதல்வர் விஜய்யின் நெருக்கமானவர்களுக்கு மட்டுமே, நட்பு வட்டாரத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே, த.வெ.க. கட்சியில் உள்ளவர்களுக்கு மட்டுமே அரசுப் பணியில் முன்னுரிமை கிடைக்கும் என்று சொன்னால் வாக்களித்து விஜய்யை தேர்ந்தெடுத்த மக்களுக்கு அல்வாதான் கிடைக்குமா என்பது கேள்வியாக இருக்கிறது.
காலை உணவு திட்டத்துக்கு ஆதிதிராவிடர், பழங்குடியினர் நிதியை எடுத்து பயன்படுத்தி உள்ளீர்கள். இது குறித்து கேட்டால் காலை உணவு திட்டத்தில் எல்லோரும் உணவு அருந்துகிறார்கள். அதில் ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களும் உணவு அருந்துகிறார்கள் என கூறுகிறார்கள்.
ஒன்று முதல் ஐந்து வரை உள்ள காலை உணவு திட்டத்தை 8 வகுப்பு வரை விரிவுபடுத்தியுள்ளீர்கள். திட்டத்துக்கு தனியாக நிதி ஒதுக்க வேண்டும் என்பதுதான் முறையான அறிவிப்பாக இருக்கும். ஆனால் அதை விடுத்து ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து காலை உணவு திட்டத்துக்கு ஒதுக்கி இருப்பது சமூக நீதிக்கே சவாலாக இருக்கிறது.
வெளிப்படுத்தன்மையோடு அரசை நடத்துவேன் என்று விஜய் வீர வசனம் பேசியதோடு சரி. ஆனால் இன்றைக்கு அரசின் நிர்வாகமும், அரசின் பணி நியமனங்களும் ஒட்டுமொத்தமாக ஒரு மர்ம கதை போல ஒரு மாயாஜால விட்டலாச்சாரியார் கதை போலதான் சென்று கொண்டிருக்கிறது” எனத் தெரிவித்தார்.
Summary
Government jobs for the Chief Minister's inner circle - What is the mystery behind not issuing a Government Order - AIADMK questions
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தனுஷ் அரசியலுக்கு வந்தால்.. முதல்வர் விஜய்யின் ஜோதிடர் ரிக்கி ராதன் என்ன சொல்கிறார்?

ஜனநாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்... என்ன செய்யப் போகிறார்கள் விஜய்யின் குட்டி ரசிகர்கள்?

கரூரில் முதல்வர் விஜய்! இன்றைய செய்திகள் ஜூலை 10 - நேரலை

கரூர் பலி: அரசுப் பணி வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது? - நீதிபதிகள்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



