முதல்வர் விஜய்க்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசியது சர்ச்சையானதைத் தொடர்ந்து தவெக அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
காவிரி விவகாரம் தொடர்பாக, தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன்பு தவெக அரசைக் கண்டித்து திமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 8 மாவட்டங்களைச் சேர்ந்த திமுகவினர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் முதல்வர், சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து, உதயநிதி ஸ்டாலின் கடுமையாகப் பேசியது சர்ச்சையாகியுள்ளது.
உதயநிதி பேசியதற்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தவெக அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட பதிவில், “பொது வாழ்வில் உள்ளவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. எனவே, அவர்கள் மிகுந்த பொறுப்புணர்வுடனும் நாகரிகத்துடனும் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.
பெண்கள் கல்வி, அறிவியல், நிர்வாகம், தொழில், விளையாட்டு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து நாட்டிற்கே பெருமை சேர்த்து வருகின்றனர். அவர்களின் கண்ணியத்தைக் குலைக்கும் இந்த பேச்சு ஏற்க முடியாதது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது கண்டனப் பதிவில், “அண்ணா உருவாக்கிய அறிவாலயத்தை ஆபாசக் கூடாரமாக மாற்றிய ஆபாசநிதி! பேரறிஞர் அண்ணா தனது தமிழ் புலமையால் கட்டியெழுப்பிய இயக்கத்தை, இன்று தனது ஆபாச மொழியாலும் இரட்டை அர்த்தப் பேச்சுக்களாலும் அழித்து வருகிறார் 'ஆபாச'நிதி.
தமிழ்நாட்டின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராய்கூட அல்ல, அடிப்படை மனித மாண்புகூட கொஞ்சமும் இல்லாமல், தரங்கெட்டத்தனமாக மேடையில் பேசியிருக்கிறார் - அண்ணா உருவாக்கிய அறிவாலயமான திமுக-வை ஆபாசத்தின் அடையாளமாக மாற்றிவிட்ட ஆபாசநிதி. பெண்கள் பற்றி அவர் கொண்டிருக்கும் வக்கிர சிந்தனையை வெளிப்படுத்தும் விதமாக இன்று அவர் பேசியுள்ள ஆபாசப் பேச்சு கேட்பவர்களைக் காது கூசச் செய்கிறது.
இதுபோன்ற இழிவான பேச்சுகளை தமிழ்நாட்டின் எந்தவொரு தாய்மார்களும், அக்கா - தங்கைகளும், பெற்றோர்களும் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். இதுபோன்ற நபர்களின் ஆதிக்க சிந்தனையால்தான் திமுகவை இந்த தேர்தலில் தமிழ்நாட்டுப் பெண்கள் தூக்கியெறிந்தார்கள். ஆனால் இப்போது, பொது மேடைகளிலேயே தனது குரூர எண்ணத்தைக் காட்டிக்கொண்டிருக்கும் ஆபாசநிதியை தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியலிலிருந்தே துடைத்தெறிவார்கள் தமிழ்நாட்டின் தாய்மார்களும், பெண்களும்! ஆபாசநிதிக்கு வன்மையான கண்டனங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் தனது சமூக ஊடகப் பக்கங்களில் உதயநிதிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், ”எதிர்க்கட்சித் தலைவர் என்ற மாண்பும் மரபும் மிக்க மிகப்பெரிய பொறுப்பை உணராமல், வாய்க்கு வந்தபடி பேசிய ஒருவரை என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை.
தன் தாத்தாவும் தந்தையும் வகித்தும்கூடவா முதல்வர் பதவியின் தகுதியும் தராதரமும் தெரியாமல் ஒருவர் இருக்க முடியும்?. அவை அடக்கமும் நாவடக்கமும் இல்லாத ஒருவரா நம் தமிழகத்தின் துணைமுதல்வராக இருந்திருக்க முடியும்?.
மக்கள் மத்தியில் இத்தகையக் கேள்விகள் இமாலய அளவிற்கு எழுந்துள்ளன. எல்லை மீறி இழிவாகப் பேசியவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் ?. Decent Approach - Decent Attack கற்றுக்கொடுத்து எங்களைக் கட்டுப்படுத்தி வளர்க்கும் மக்கள் விரும்பும் முதல்வரான நம் வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை இப்படி அநாவசியமாகவும் அநாகரிகமாகவும் தொட்டவர்கள் நிலை என்னவாயிற்று என்பதை யாராக இருந்தாலும் உணர்ந்தே ஆக வேண்டும்.
மக்கள் உணர்த்தியே தீருவர். அதில் மாற்றமும் இல்லை. மாற்றுக் கருத்தும் இல்லை. அமைதி காக்கச் சொல்லி எங்கள் தலைவர் தளபதியின் நாகரிக வளர்ப்பு எங்களைத் தடுக்கிறது. வேறு என்ன சொல்ல?. அறிஞர் அண்ணா பாணியில் ‘வசவாளர்கள் வாழ்க’ என்று சொல்லலாம்.ஆனால், ஆபாசநிதிகளை?.
மாண்பும் மரியாதையும் தகுதியும் தராதரமும் மிக்க எங்கள் தலைவர் தளபதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சொல்வதுபோல மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். யாரும் மறந்துவிட வேண்டாம் என்று எச்சரிக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் தனது பதிவில், “தமிழ்நாடு விவசாயிகளின்- பொதுமக்களின் வாழ்வாதார பிரச்சனையான காவிரி நீர் பிரச்சனையில்... நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சட்ட நடவடிக்கைகள் உட்பட பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வரும் நிலையில், நாங்களும் போராடுகிறோம் என ஷோ காட்டும் விதமாக ஆகஸ்ட் 3-ஆம் தேதி தஞ்சாவூரில் திமுக நடத்திய ஆர்பாட்டத்தில் தனது சுய ரூபத்தை வெளிக்காட்டி விட்டார் மாண்பு இல்லாத எதிர்க்கட்சித் தலைவரான ஆபாசநிதி. சுட்டுப் போட்டாலும் எங்களுக்கு நாகரீகமாக பேச வராது என்பதை தஞ்சாவூரில் மேடை போட்டு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் ஆபாசநிதி. காவிரியை நம்பி இருக்கும் ஒட்டுமொத்த விவசாய பெருமக்களையும், ஒட்டுமொத்த பெண்களையும், ஒட்டுமொத்த மனித சமுதாயத்தையே இழிவுபடுத்துகிற வகையில் அவருடைய ஆபாச மேடைப் பேச்சு அருவெறுப்பூட்டுகிறது. மிகவும் கண்டிக்கத்தக்கது.
காவிரி பிரச்சனையில் ஆபாசநிதியின் கண்ணோட்டம் எப்படி இருக்கிறது என்பதையும் அவருடைய சாக்கடை சிந்தனையின் துர்நாற்றத்தையும் தமிழ்நாடு உணர்ந்து கொண்டு விட்டது. இப்படிப்பட்ட ஆபாச நிதியின் கைகளில் தான் பேரறிஞர் அண்ணா தொடங்கிய திமுக சிக்கப் போகிறது என்பது அண்ணாவையே அவமானப் படுத்துவதாகும். சிங்கப் பெண்கள் நிறைந்த தமிழகத்தில்... அசிங்க அரசியல் செய்யும் ஆபாச நிதி மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய நேரம் இது” எனப் பதிவிட்டுள்ளார்.
Summary
TVK ministers have expressed condemnation following the controversy sparked by Opposition Leader Udhayanidhi's remarks against Chief Minister Vijay.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா? உதயநிதியை விமர்சித்த அண்ணாமலை!

தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்

சாமானியருக்கு ஒரு சட்டம், தவெக நிர்வாகிக்கு ஒரு சட்டமா? உதயநிதி ஸ்டாலின்

முதல்வர் விஜய்யும், உதயநிதியும் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும்! பெ. சண்முகம் கண்டனம்!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |




