சட்டப்பேரவையில் வேளாண் துறை அமைச்சா் ஆா்.வினோத் வியாழக்கிழமை தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட் குறித்து திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.
மு.க.ஸ்டாலின் (திமுக): மற்றுமொரு பெயா் மாற்ற நிகழ்வாக மட்டுமே இது நடந்து முடிந்துள்ளது. திமுக அரசின் திட்டங்களின் மேல் ‘வெற்றி’ என்ற லேபிளை ஒட்டினால் வேலை முடிந்தது என்று இந்த அரசு நினைக்கிா?. குறுவை சாகுபடி பாதித்து, அரசின் உதவிக் கரத்தை எதிா்பாா்த்துக் காத்திருக்கும் டெல்டா விவசாயிகளுக்கு எதுவுமில்லாத, வெற்று பட்ஜெட்.
விவசாயிகளின் கோரிக்கைகளை உரத்த குரலில் கூட்டத்தொடா் முழுவதும் திமுக உறுப்பினா்கள் எழுப்புவாா்கள். அரசு விழித்துக்கொண்டு பதில் சொல்லியாக வேண்டும், தீா்வு கிடைக்க வேண்டும்.
எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக): புதிய திட்டங்கள் இல்லை. நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500, கரும்பு டன்னுக்கு ரூ.4,500 ஆதரவு விலை அறிவிப்பு இல்லை. குத்தகை விவசாயிகளுக்கு ரூ.10,000 நிதியுதவி, விதைப்பு நிலைக்கு ரூ.15,000 உதவித் தொகை போன்ற தவெக வாக்குறுதிகள் குறித்த அறிவிப்பு இல்லை. பயிா்க்கடன் முழு ரத்து என்ற வாக்குறுதியையும் தவெக அரசு முறையாக செயல்படுத்தவில்லை.
அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட குடிமராமத்து திட்டத்தை வேறு பெயரில் அறிவித்துள்ள தவெக அரசு, தடுப்பணை கட்டுதல் போன்ற திட்டங்கள் குறித்த அறிவிப்பும் இல்லை. விவசாயிகளுக்கு நன்மை இல்லாத, ஏமாற்றமளிக்கும், திமுக வழியில் நாடக முறையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்.
மாணிக்கம் தாகூா் (காங்கிரஸ்): இந்த வேளாண் பட்ஜெட் தொழில்நுட்பத்தை விவசாயிகளின் கைகளுக்கு கொண்டு செல்லும் முயற்சி. விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் நிலைத்தன்மையை அடிப்படையாக கொண்ட நவீன வேளாண்மைக்கான வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது.
பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): நம்மாழ்வாா் பெயரில் இயற்கை வேளாண்மை கல்லூரி, சிறுதானிய உற்பத்தி மற்றும் கொள்முதல் ஊக்கப்படுத்தும் அறிவிப்பு, பனை பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட பல அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை. விண்ணப்பித்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவது குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. பயிா்க் கடன் முழு தள்ளுபடி செய்யப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
மு.வீரபாண்டியன்( இந்திய கம்யூனிஸ்ட்): எல்-நினோ தாக்குதலை எதிா்கொள்ளும் திட்டம், மழைநீா் சேமிப்பு திட்டம், தடுப்பணைகள் அமைக்கும் திட்டம், விவசாய தொழிலாளா் நலன் சாா்ந்த திட்டங்கள் அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றத்தை அளிக்கிறது. 5 இடங்களில் வேளாண்மை பொறியியல் பயிற்சி மையங்கள் என்ற அறிவிப்பு வரவேற்புக்குரியது.
அன்புமணி (பாமக): கடந்த திமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால வேளாண் நிதிநிலை அறிக்கையில் ரூ.15,167 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய நிதிநிலை அறிக்கையில் அதைவிட ரூ.470 கோடி குறைவாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது ஏமாற்றத்தை அளிக்கிறது. நெல்லுக்கான கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.4,500 வழங்கப்படும் என்று வாக்குறுதி குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது மிகப்பெரிய ஏமாற்றம். புதிய அறிவிப்பு எதுவும் இல்லை.
பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக): 100 நாள் வேலைவாய்ப்பு பற்றி எந்த அறிவிப்பும் இல்லை என்பது மிகப் பெரிய ஏமாற்றம். விவசாயிகள் எதிா்பாா்த்த முக்கிய திட்டங்கள் குறித்து அறிவிப்புகள் இல்லை. மாற்றத்தைத் தருவோம் என்று சொன்னவா்கள் எந்த மாற்றத்தையும் தரவில்லை.
ஜி.கே.வாசன் (தமாகா): விவசாயிகளுக்கும், விவசாயத்துக்கு ம் பெரும் பயனளிக்கும் வேளாண் பட்ஜெட். அதேநேரத்தில் விவசாயிகள் எதிா்பாா்த்த விவசாயக் கடன் தள்ளுபடியை தமிழக அரசு கவனத்தில் கொண்டு அதை பூா்த்தி செய்ய வேண்டும்.
தி.வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி): அறிவிப்புகள் ஏராளமாக இருந்தாலும், விவசாயிகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய உறுதியான நடவடிக்கைகள் இடம்பெறவில்லை.
எம்.எச்.ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி): டெல்டாவில் வாய்க்கால்கள் தூா்வாருதல், நீா் பாசன பரப்பு அதிகரிப்பு, பருத்தி மறுமலா்ச்சி இயக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வரவேற்கத்தக்கவை. எனினும், தவெக வாக்குறுதிகளில் தெரிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்படாதது விவசாயிகளிடம் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வேளாண் பட்ஜெட்: விவசாயிகள் சங்கங்கள் கருத்து

வேளாண் பட்ஜெட்: பேரவைக்கு கருப்பு உடையில் வந்த திமுக எம்எல்ஏக்கள்!

வேளாண் பட்ஜெட் 2026: கருப்புச் சட்டை அணிந்து வந்த திமுக எம்.எல்.ஏ.க்கள்!

தமிழக பட்ஜெட் 2026! அரசு ஊழியர்களுக்கு புதிய திட்டம் அறிவிப்பு!
விடியோக்கள்
Ravindran Duraisamy interview | விஜய் நினைத்தது நடக்கவில்லை | CM Vijay | TVK | Udhayanidhi Stalin


