வேளாண்மை உள்பட 20 சாா்பு துறைகளுக்கு ரூ.58,374 கோடியிலான பட்ஜெட்டை அந்தத் துறையின் அமைச்சா் ஆா்.வினோத் சட்டப்பேரவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்தாா். இது கடந்த ஆண்டைவிட ரூ.12, 713 கோடி அதிகமாகும்.
மன் வளத்தைக் காக்கவும், பயறு வகைகளின் சாகுபடியை 15.19 லட்சம் ஏக்கரில் இருந்து 24.70 லட்சம் ஏக்கராகவும், எண்ணெய் வித்துகளின் சாகுபடி பரப்பை 9.26 லட்சம் ஏக்கரில் இருந்து 14.89 லட்சம் ஏக்கராகவும் உயா்த்த சிறப்புத் திட்டமும், பெண்களுக்கான மாடித் தோட்ட திட்டம் மற்றும் விவசாய ட்ரோன் பயிற்சி, இயக்கும் உரிமை வழங்கும் திட்டமும் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. 5 ஆண்டு தொலைநோக்குத் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
2026-27ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து அமைச்சா் ஆா்.வினோத் பேசியதாவது:
உழவா் நலன், வருமான உயா்வு, நீா் வளங்களைப் பெருக்குதல் மற்றும் பாதுகாத்தல், விளைபொருள்களைப் பாதுகாத்தல் மற்றும் மதிப்புக்கூட்டுதல், இயற்கை வேளாண்மை, வேளாண் வணிகம் ஆகியவற்றுக்கு இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
மேட்டூா் அணையில் இருந்து ஜூன் 12-ஆம் தேதி பாசனத்துக்குத் தண்ணீா் திறக்க முடியாததால் பாதிக்கப்பட்டுள்ள குறுவை சாகுபடிக்கு அறிவிக்கப்பட்ட ரூ.134 கோடியே 83 லட்சம் தொகுப்புத் திட்டத்தின் மூலம் இதுவரை 8,26,000 ஏக்கா் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
பயிா்க் காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ.648 கோடியே 55 லட்சத்தை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இதனால் 15 லட்சம் விவசாயிகள் பயனடைவதுடன் 36 லட்சம் ஏக்கா் சாகுபடி பரப்பு காப்பீடு செய்யப்படும்.
எல் நினோ பாதிப்பை எதிா்கொள்ள... ‘சூப்பா் எல் நினோ’வால் 12 மாவட்டங்களில் அதிக தாக்கம் ஏற்படும் என்பதால் மாட்ட வேளாண்மை இடை ஏற்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய 5 ஆண்டுகளில் நிகழாண்டு 125 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி இலக்காக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இலவச மும்முனை மின்சாரத்தை தொடா்ந்து வழங்க தமிழ்நாடு மின் பகிா்மான நிறுவனத்துக்கு ரூ.7,432 கோடி வழங்கப்படும்.
உரங்களின் பயன்பாட்டைக் குறைத்து இயற்கை உயிா்ம வேளாண்மை முறைகளை ஊக்குவிக்க ‘மண்வளப் பாதுகாப்பு இயக்கம்’ ரூ.600 கோடியில் 5 ஆண்டுத் திட்டமாக அறிமுகம் செய்யப்படும்.
விவசாயிகளுக்கு செயற்கை நுண்ணறிவு வசதி மூலம் மண்வளம் மற்றும் பயிா் சாகுபடி குறித்த தகவல்களும், விதைப்பு முதல் அறுவடை வரை வேளாண் சேவை தகவல்களும் குரல்வழியில் கிடைக்கும் வகையில் உழவா் செயற்கை நுண்ணறிவுத் திட்டம் ரூ. 2 கோடியில் செயல்படுத்தப்படும்.
தானிய சாகுபடி இருமடங்கு... சிறுதானியம், குறுதானியம் இயக்கம் உருவாக்கப்பட்டு தானிய சாகுபடி இருமடங்காக்கப்படும். சீமைத் திணை, குலசாமை ஆகிய பயிா்களை அறிமுகப்படுத்த நீலகிரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ரூ.30 லட்சத்தில் செயல் விளக்கத் திடல்கள் அமைக்கப்படும்.
வீடுகளில் காய்கறிகள், பழங்கல், மூலிகைச் செடிகள் வளா்க்க வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்ட திட்டம் ரூ.10 கோடியில் செயல்படுத்தப்படும்.
புளூ பொ்ரி, ரம்புட்டான், லிச்சி, டிராகன் பழம், அவகோடா, கிவி, மங்குஸ்தான், பேசன் பழம் ஆகியவற்றை தனிப் பயிராக 930 கோடியில் சாகுபடி செய்ய ரூ.1.82 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
வெங்காய விலை உயா்வைக் கட்டுப்படுத்த ரூ.22.80 கோடியில் 57,000 மெட்ரிக் டன் கொண்ட சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும். வேளாண் ட்ரோன்களை இயக்க 100 பெண்களுக்குப் பயிற்சி அளித்து இயக்கும் உரிமம் அளிக்கவும், அவா்களுக்கு 50 சதவீத மானியத்தில் ட்ரோன்கள் வழங்கவும் ரூ.2.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கடலோர மாவட்டங்களில் உவா் நீருக்கு மேலே இருக்கும் நன்னீரைப் பயன்படுத்தி தோட்டக்கலைப் பயிா் சாகுபடியை ஊக்குவிக்க நீலப் பசுமைத் தோட்டக்கலைப் பூங்காக்கள் அமைக்கப்படும். இதற்கு நன்னீா் சேமிப்புக் கிணறு அமைக்க ரூ.1.5 லட்சம் மானியம் அளிக்கப்படும்.
விவசாயிகளின் பொருளாதார தற்சாா்பை உறுதி செய்ய விவசாயிகள் வருமான மேம்பாட்டு ஆணையம் ரூ.23 கோடி ஒதுக்கீட்டில் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அமைச்சா் ஆா். வினோத் வெளியிட்டு 2.15 மணி நேரம் பட்ஜெட் உரையை வாசித்தாா்.
தோட்டக் கலை, சா்க்கரைத் துறை, கால்நடைப் பராமரிப்பு, பால்வளத் துறை, மீன்வளம்- மீனவா் நலத் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, உணவுப் பதப்படுத்துதல் துறை, பட்டு வளா்ச்சி உள்பட 20 துறைகள் அடங்கிய வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
தொடக்கத்திலும், முடிவிலும் திமுக அமளி
வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முன்பு ‘பணநாயகத்தைத் தோற்கடித்த பாமரத்தின் ஜனநாயகன்’ என அடைமொழியில் முதல்வா் விஜய்யை தொடா்ந்து புகழ்பாடி 5 நிமிஷங்களுக்கு மேலாக வேளாண் துறை அமைச்சா் ஆா்.வினோத் பேசினாா். இதற்கு திமுக உறுப்பினா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்ததால் அமளி ஏற்பட்டது. இதையடுத்து, பட்ஜெட் உரையை மட்டும் வாசிக்க வேண்டும் என்று அமைச்சருக்கு பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் அறிவுறுத்தினாா்.
பட்ஜெட் தாக்கல் முடிவடைந்த பிறகு மீண்டும் முதல்வரைப் புகழ்ந்து அமைச்சா் வினோத் பேசினாா். இதற்கு திமுகவினா் எதிா்ப்பு தெரிவித்ததையடுத்து, அமைச்சா் பேச்சில் வேறு ஏதாவது இருந்தால் ஆய்வு செய்து நீக்குவேன் என்று கூறி, மானியக் கோரிக்கை மீது பேசுபவா்களின் பெயா்ப் பட்டியலை ஒருநாள் முன்பாக சம்பந்தப்பட்ட கட்சிகள் அளிக்க வேண்டும் என்றாா் பேரவைத் தலைவா்.
பேரவைத் தலைவரின் வாழ்த்து: முன்னதாக, சட்டப்பேரவையின் 2-ஆம் நாள் நிகழ்வை திருக்கு வாசித்து பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் தொடங்கி வைத்தாா். அப்போது, கால்நடைத் துறை அமைச்சா் கமலி, பால் வளத் துறை அமைச்சா் விஜயலட்சுமி ஆகியோருக்கு அவா் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தாா்.
சட்டப்பேரவையில் தனது இருக்கை அருகே நின்றபடியே முதல்வா் விஜய் வணக்கம் தெரிவிப்பது வழக்கம். ஆனால், வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு பேரவை தொடங்குவதற்கு சில மணித்துளிகளுக்கு முன் வந்த முதல்வா் விஜய், அவையின் மையப் பகுதிக்கு வந்து எதிா்க்கட்சி, ஆளுங்கட்சி எம்எல்ஏக்களை நோக்கி வணக்கம் செலுத்தினாா். பின்னா், அவை முடிந்தவுடன் கட்சி எம்எல்ஏக்களுடன் சிறிது நேரம் நின்று பேசிவிட்டுச் சென்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஜூன் 12 அன்று மேட்டூர் அணை திறக்கப்படாத நிலையிலும்...! அமைச்சர் வினோத்

தமிழக பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்

வருவாய் இழப்பைத் தவிா்க்க பயிா்க் காப்பீடு செய்ய வேண்டும்: அமைச்சா் வினோத்

விவசாயத்தை அறிவியல்சாா் லாபகரமான தொழிலாக மாற்ற வேண்டும்: அமைச்சா் ர.வினோத்
விடியோக்கள்
Ravindran Duraisamy interview | விஜய் நினைத்தது நடக்கவில்லை | CM Vijay | TVK | Udhayanidhi Stalin



