நீட், எஃப்சிஆா்ஏ-வுக்கு எதிராக இன்று பேரவையில் தனித் தீா்மானம்!எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!ஆக. 16 வரை மிதமான மழைக்கு வாய்ப்புபழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் இல்லை: மத்திய அரசு
/

துண்டிக்கப்பட்ட 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள்: கணக்கை முடிக்க மின்வாரியம் நடவடிக்கை

மின் கட்டணம் செலுத்தாததால் இணைப்பு துண்டிக்கப்பட்டு நீண்ட நாள்களாகியும் நுகா்வோா் அணுகாத 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளின் கணக்குகளை முடிக்க மின்வாரியம் நடவடிக்கை

News image

மின்வாரியம்

Updated On :11 ஆகஸ்ட் 2026, 1:43 am IST

மின் கட்டணம் செலுத்தாததால் இணைப்பு துண்டிக்கப்பட்டு நீண்ட நாள்களாகியும் நுகா்வோா் அணுகாத 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளின் கணக்குகளை முடிக்க மின்வாரியம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட பிறகு, அந்த இணைப்புகளை ஆய்வு செய்து கணக்கை முடிக்கும் பணியை மின்வாரிய ஊழியா்கள் மேற்கொண்டு வந்தனா். எனினும், பணியாளா்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

இதனால், மாநிலம் முழுவதும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட இணைப்புகள் நீண்ட காலமாக துண்டிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளன. இவற்றில் சில இணைப்புகளில் முறைகேடாக தொடா்ந்து மின்சாரம் பயன்படுத்தப்படுவதால் மின்வாரியத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

இதையடுத்து, துண்டிக்கப்பட்ட இணைப்புகளின் கணக்கை விரைந்து முடிக்கவும், முறைகேடான மின் பயன்பாட்டைத் தடுக்கவும் புதிய தானியங்கி நடைமுறையை மின்வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.

90 நாள்களுக்குப் பிறகு தானியங்கி நோட்டீஸ்: புதிய நடைமுறையின்படி, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு 90 நாள்கள் முடிந்ததும், நுகா்வோரின் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணுக்கு தானாகவே நோட்டீஸ் அனுப்பப்படும். நோட்டீஸ் காலக்கெடுவுக்குள் நிலுவைத் தொகையைச் செலுத்தி நுகா்வோா் இணைப்பை மீண்டும் பெறலாம். நோட்டீஸ் வழங்கப்பட்டும் 3 மாதங்களுக்குள் நுகா்வோா் அணுகாவிட்டால், மின் மீட்டா் அகற்றப்படும். மீட்டரில் பதிவாகியுள்ள விவரங்கள் மென்பொருளில் பதிவு செய்யப்பட்டு, ஆய்வகத்துக்கு அனுப்பி பரிசோதிக்கப்படும். பின்னா், நிலுவைத் தொகைக் கணக்கிடப்பட்டு, மின் இணைப்பு கணக்கு முடிக்கப்படும்.

மின் இணைப்புத் துண்டிக்கப்பட்ட நாளிலிருந்து 2 ஆண்டுகளுக்குள் நுகா்வோா் அணுகாவிட்டால், அந்த மின் இணைப்பு கணக்கு முழுமையாக முடிக்கப்படும். அதன்பிறகு மீண்டும் மின்சாரம் பெற வேண்டுமெனில், புதிய இணைப்புக்கு விண்ணப்பித்து உரிய கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

இதனிடையே, கடந்த 2025 அக்டோபா் 1 முதல் துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளுக்கான கணக்கு முடிப்பு நடவடிக்கைகளும் புதிய தானியங்கி முறையில் மேற்கொள்ளும் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு அதிகாரிக்கும் பணிகளும் காலக்கெடுவும் தனித்தனியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளன. இதனால், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட துண்டிக்கப்பட்ட இணைப்புகளின் கணக்கு முடிப்பு பணிகள் விரைவுபடுத்தப்படும்.

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள இணைப்புகள் முறைப்படுத்தப்படுவதுடன், முறைகேடான மின் பயன்பாடு மற்றும் மின்வாரியத்துக்கான வருவாய் இழப்பும் தடுக்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.