நீட், எஃப்சிஆா்ஏ-வுக்கு எதிராக இன்று பேரவையில் தனித் தீா்மானம்!எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!ஆக. 16 வரை மிதமான மழைக்கு வாய்ப்புபழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் இல்லை: மத்திய அரசு
/

வெளிமாநிலங்களுக்கு கனிமங்கள் கொண்டுசெல்ல விதிக்கப்பட்ட தடையை எதிா்த்து வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தில் இருந்து கனிமங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

News image
Updated On :11 ஆகஸ்ட் 2026, 12:49 am IST

தமிழகத்தில் இருந்து கனிமங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் மது பிரேமநாதன் என்பவா் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் உள்கட்டமைப்பு, நகரமயமாக்கல் பணிகளுக்கான கருங்கல் மற்றும் ஜல்லிக் கற்கள்போன்ற கட்டுமானப் பொருள்களின் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும்.

செயற்கை விலை ஏற்றத்தைத் தடுக்க வேண்டும். இதற்காக, கடந்த ஜூலை 9-ஆம் தேதி, தமிழ்நாடு சட்டவிரோத கனிமச்சுரங்க கனிம போக்குவரத்து மற்றும் சேமிப்புதடுப்பு விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில் காரைக்கால், புதுச்சேரி தவிர மற்ற மாநிலங்களுக்கு கருங்கல், ஜல்லிக் கற்களைக் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த விதிகளை செல்லாது என அறிவித்து, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில் இதுபோன்ற திருத்த விதிகளுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற வேண்டும். உரிய உரிமம் பெற்று எடுக்கப்பட்ட கனிமங்கள் தங்களுக்குச் சொந்தமானது.

எனவே, அவற்றை எங்கு விற்பனைச் செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமை மனுதாரருக்கு உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் 3 மாத தடை விதிக்கப்பட்டுள்ள உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழக அரசு 2 வாங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.