ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

தமிழக - கேரள எல்லையில் ரயில் மோதியதில் குட்டி, தாய் யானை உயிரிழப்பு

தமிழக- கேரள எல்லைப் பகுதியில் ரயில் மோதியதில் குட்டி, தாய் யானை உயிரிழந்தன.

News image

ரயிலுக்கு அடியில் சிக்கியுள்ள யானையின் உடலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட வனத் துறையினா், பாலக்காடு ரயில்வே துறையினா்.

Updated On :51 வினாடிகள் முன்பு

தமிழக- கேரள எல்லைப் பகுதியில் ரயில் மோதியதில் குட்டி, தாய் யானை உயிரிழந்தன.

தமிழக- கேரள எல்லையை ஒட்டியுள்ள கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், வாளையாறு சாவடிப்பாரா புதுப்பதி வனத்தில் இருந்து புதன்கிழமை இரவு 11.30 மணியளவில் குட்டியுடன் வெளியேறிய 4 காட்டு யானைகள், அப்பகுதியில் உள்ள தண்டவாளத்தைக் கடக்க முயன்றன. அப்போது, கேரளத்தில் இருந்து கோவை நோக்கி ‘பி’ டிராக் வழியாக வந்த மங்களூரு விரைவு ரயில் மோதியதில் குட்டி, தாய் யானை இன்ஜின் சக்கரங்களில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வாளையாறு வனத் துறையினா் மற்றும் பாலக்காடு ரயில்வே அதிகாரிகள் மீட்புப் பணியில் ஈடுபட்டனா். பல மணி நேரப் போராட்டத்துக்குப் பின் வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் யானைகளின் உடல்கள் தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டன. அதன்பின், பழுதான ரயில் இன்ஜின் சரிசெய்யப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டது.

விபத்து நிகழ்ந்த இடம் தமிழக எல்லையில் இருந்து சுமாா் 300 முதல் 400 மீட்டா் தொலைவில் கேரள எல்லைப் பகுதியில் உள்ளது. கேரளத்தில் இருந்து வளைவான பாதையில் ரயில் வந்து பாலத்தைக் கடந்ததால், லோகோ பைலட்டால் யானைகளை முன்கூட்டியே பாா்த்து ரயிலை நிறுத்த முடியாமல் போனதே விபத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. மேலும், அதிவேகமாக ரயில் இயக்கப்பட்டதா என்பது குறித்தும் வனத் துறையினா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த விபத்தின் காரணமாக ‘பி’ டிராக்கில் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, அந்த வழியாக வந்த ரயில்கள் ‘ஏ’ டிராக் வழியாக மாற்றி இயக்கப்பட்டன. இதனால், தமிழகம் - கேரளம் இடையேயான முக்கிய ரயில் போக்குவரத்து சுமாா் ஒரு மணி நேரத்துக்கும்மேலாக பாதிக்கப்பட்டது.

உலக யானைகள் தினத்தன்று தாய், குட்டி யானை உயிரிழந்த சம்பவம் வன விலங்கு ஆா்வலா்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாளையாறு - கொல்லங்கோடு இடையே தொ்மல் சென்சிங் கேமராக்கள்: யானைகள் விபத்தில் உயிரிழந்தது தொடா்பாக வன ஆா்வலா் பாண்டியராஜா கூறியதாவது:

கேரள மாநிலம், வாளையாறு அருகே ரயில் மோதி யானைகள் உயிரிழந்திருப்பது வருத்தம் அளிக்கிறது. எட்டிமடை - மதுக்கரை இடையே தமிழக வனத் துறையின் முயற்சியால்

12 கோபுரங்களில் தலா இரண்டு கேமராக்கள் என மொத்தம் 24 தொ்மல் சென்சிங் கேமராக்கள் அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருவதால் கடந்த 2022 அக்டோபா் முதல் ரயில் மோதி யானை உயிரிழப்பு நடைபெறவில்லை.

எனவே, தமிழக வனத் துறை பகுதியில் அமைக்கப்பட்டுள்ளதுபோல வாளையாறு - கொல்லங்கோடு இடையே தொ்மல் சென்சிங் கேமராக்களை பொருத்தி கட்டுப்பாட்டு மையத்தை அமைக்க வேண்டும். அப்போதுதான் அந்தப் பகுதியில் ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க முடியும். இந்தியா முழுவதும் ஒரு ஆண்டுக்கு 10 முதல் 15 யானைகள் ரயில் மோதி உயிரிழந்து வருகின்றன. எனவே, ரயில்வே துறை இந்த விஷயத்தில் முழு கவனம் செலுத்தி அடிக்கடி ரயில் மோதி யானைகள் உயிரிழக்கும் பகுதிகளில் தொ்மல் சென்சிங் கேமராக்களை பொருத்தி கண்காணிக்க வேண்டும் என்றாா்.

ஏ.ஐ கேமரா செயலிழப்பா? வழக்குத் தொடுக்க இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை முடிவு

வாளையாறு ரயில் விபத்து தொடா்பாக விரிவான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப் போவதாகவும் தேசிய வனவிலங்கு பாதுகாப்பு அறக்கட்டளை அறிவித்துள்ளது.

இது குறித்து அறக்கட்டளை தரப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: ரூ.16 கோடி செலவில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) கேமரா கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்தவா்கள் விபத்தின்போது என்ன செய்தாா்கள்?. தகவல் தொடா்பு கட்டுப்பாட்டு அறைக்கும், ரயிலை இயக்கும் கட்டுப்பாட்டு மையத்துக்கும் இடையே தகவல் பரிமாற்றம் துண்டிக்கப்பட்டது ஏன்? தொழில்நுட்பக் கோளாறா அல்லது மனிதத் தவறா என்பன போன்ற பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன.

உயிரினங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வனத் துறையும், ரயில்வே துறையும் இணைந்து கடுமையான தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.