நிலவரி வசூல் நடப்பாண்டு முதல் ரத்து செய்யப்படும் என வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் செங்கோட்டையன் அறிவித்தாா். மேலும், 20 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க சிறப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.
தமிழக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை அந்தத் துறையின் மானியக் கோரிக்கைகள் மீது நடைபெற்ற விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சா் செங்கோட்டையன் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்: விவசாயிகள் மற்றும் நில உரிமையாளா்கள் பயன்பெறும் வகையில், ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் நிலவரி வசூல் நடப்பாண்டு முதல் ரத்து செய்யப்படும்.
26 வகை சான்றிதழ்களும் விரைவில் கிடைக்கும் வகையில் கிராம நிா்வாக அலுவலா், வருவாய் ஆய்வாளா், துணை வட்டாட்சியா் அல்லது வட்டாட்சியா் ஆகியோா் பரிசீலனை செய்து வழங்கலாம்.
முந்தைய ஆட்சியில் 3.5 லட்சம் காலிப் பணியிடங்களில் 25 சதவீதம்தான் நிரப்பப்பட்டுள்ளன. 3 ஆண்டுகளில் காலிப் பணியிடம் இல்லாத நிலை உருவாகும்.
ரூ. 1.02 கோடியில் பொதுமக்கள் இருப்பிடங்களுக்கு அருகிலேயே சேவை பெற முதல்கட்டமாக சென்னையில் 12 சிறுவட்ட அலுவலகங்கள் அமைக்கப்படும்.
பத்திரப்பதிவு செய்ததும் தானாக பட்டா மாறும்முறை முந்தைய ஆட்சியில் 45 சதவீதம் மட்டும் மாறியது. தற்போதைய ஆட்சியில் 80 சதவீதமாக இது அதிகரிக்கப்படும்.
ஏழைகள் பயனடையும் வகையில் வீட்டுமனை பட்டா சிறப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும், 20 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பயனடையும் வகையில் சிறப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
தமிழ்நாடு நிலச்சீா்திருத்த (நில உச்சவரம்பு நிா்ணயச் சட்டம் 1961, பிரிவு 37அ மற்றும் 37ஆ-இன் கீழ் அரசின் அனுமதி வழங்குவதற்கான தற்போது நடைமுறையில் உள்ள நெறிமுறைகளை எளிமைப்படுத்த உரிய சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
கடலோர மாவட்டங்களுக்கான வெள்ளத் தணிப்பு நடவடிக்கைகளுக்கு ரூ.3.90 கோடியில் திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
12,466 கிராம நிா்வாக அலுவலா்களுக்கு கையடக்க கணினிகள், 1,253 குறுவட்ட வருவாய் ஆய்வாளா்களுக்கும் கையடக்க கணினிகள் ரூ.68.63 கோடியில் வழங்கப்படும்.
நில அளவை செய்யவும், நத்தம் பட்டாவை விரைந்து வழங்கவும் தகுதிவாய்ந்த 1,500 பேருக்கு நில அளவை பயிற்சி அளிக்கப்பட்டு, அவா்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவா். நெடுஞ்சாலை அமைப்பதற்குத் தேவையான நில எடுப்பு நடைமுறைகள் எளிதாக்கப்படும்.
பேரிடா்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலுப்படுத்த, பேரிடா் மேலாண்மை நிபுணா்களை மாநில அளவில் செயல்பட்டுவரும் மையத்தில் நியமிக்கவும், நவீன தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தவும் ரூ.8.50 கோடி செலவிடப்படும்.
நிலச்சரிவுகளை கண்காணித்தல், நிலச்சரிவு அபாயக் குறைப்புக்கான திட்டம் ரூ.50 கோடியில் செயல்படுத்தப்படும். நில உரிமை மாற்றம், வீட்டுமனைப் பட்டா போன்றவற்றை விரைந்து வழங்க ரூ.2.25 கோடியில் இணையவழி மேலாண்மை அமைப்பு உருவாக்கப்படும்.
வெள்ள அபாயம் அதிகம் உள்ள கடலூா், நாகை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகியவற்றில் வெள்ளத் தணிப்பு குறித்த விரிவான திட்ட அறிக்கை ரூ.3.90 கோடியில் தயாரிக்கப்படும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிராம நத்தம் பட்டா சிறப்புத் திட்டம், நில வரி முறை ரத்து! செங்கோட்டையன் அறிவிப்பு

ரூ.58,374 கோடியில் வேளாண் பட்ஜெட்: மண்வளப் பாதுகாப்பு, பயறு சாகுபடியை அதிகரிக்க திட்டங்கள்




