‘அலங்கோல ஆட்சியை விளம்பரப் படுத்துவதா?’ என்று முதல்வர் விஜய்க்கு அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டிடிவி தினகரன் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் கொலைச் சம்பவங்களால் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு – ஜோசப் விஜய் அவர்கள் முதல்வராக தமிழகத்தை ஆட்சி செய்யப் போவது எப்போது?
சென்னை வண்ணாரப்பேட்டை தங்கசாலை மேம்பாலம் அருகே உள்ள நகர்ப்புற வாழ்விடக் குடியிருப்புப் பகுதியில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதில், பொதுமக்கள் தங்களது உயிரைப் பாதுகாத்துக் கொள்ளப் பதற்றத்துடன் ஓடியதாக சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள காணொளிக் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன.
கடந்த இரு நாள்களில் மட்டும் காஞ்சிபுரம் அருகே இரட்டைக் கொலை, திருப்புவனம் அருகே இளைஞர் குத்திக் கொலை, நெய்வேலியில் இளைஞர் வெட்டிக் கொலை, திருப்பூர் அருகே வடமாநில இளைஞர் தலையில் கல்லைப் போட்டுக் கொலை என, தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கொலைச் சம்பவங்கள் நடைபெறாத நாள்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை சந்தி சிரிக்கும் அளவிற்குச் சென்றிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது.
அதேபோல சேலம் வாழப்பாடியில் சமூகநீதி விடுதியில் தங்கி பயிலும் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல், தஞ்சாவூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை, சேலம் கொண்டலாம்பட்டியில் 14 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை, ஈரோடு அருகே 85 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது என, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தமிழகத்தில் சர்வசாதாரணமாக அரங்கேறிக் கொண்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
இப்படி, தினந்தோறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், போதைப்பொருட்களின் தாராளப் புழக்கம் என, ஒட்டுமொத்த தமிழகமும் பதற்றமான சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கும் நிலையில், தவெக அரசும் அதன் முதல்வரும் தங்களது முதல் 100 நாள் அலங்கோல ஆட்சியை சாதனையாக அறிவித்து பல கோடி ரூபாய் செலவில் நாடு முழுவதும் விளம்பரப்படுத்துவது காலக்கொடுமை.
ஆட்சிப் பொறுப்பேற்ற நாளிலிருந்து கால அவகாசம் தேவை என்பதையும், தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் குற்றச் சம்பவங்களுக்கு முந்தைய ஆட்சியாளர்களே காரணம் என்பதையும் வாடிக்கையாகக் கூறி வரும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய், எப்போது தான் தமிழகத்தை ஆட்சி செய்யத் தொடங்குவார்? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
குற்றச் சம்பவங்கள் அரங்கேறிய பின் குற்றவாளிகளைக் கைது செய்வதை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாமல், குற்றங்கள் நடைபெறுவதற்கு முன்பாகவே அவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தமிழக மக்கள் அச்சமின்றி, பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தவெக அரசையும், முதல்வர் விஜய்யும் வலியுறுத்துகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
Summary
AMMK General Secretary TTV Dhinakaran has condemned Chief Minister Vijay, asking, "Is this about advertising a chaotic administration?"
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: வனத் துறைக்கு அதிகாரம் கொடுத்தது யார்? டிடிவி தினகரன்
ஆளும் தவெக அரசை காங்கிரஸ் கட்சிதான் இயக்குகிறதா? டிடிவி தினகரன்
அரசு நிா்வாகத்தில் தவெகவினா் தலையிடுவதைத் தடுக்க வேண்டும்: டிடிவி தினகரன்
திமுக - அதிமுக ஒன்றிணையுமா? எந்தக் கூட்டணியும் நியாயமே! டிடிவி தினகரன் பதில்
விடியோக்கள்

Perumal mani interview | விஜய் அரசின் தனித்தீர்மானங்களால் என்ன பயன் ? | CM Vijay | TVK | TN Assembly



