
எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைவதை வன்மையாக கண்டிக்கிறேன்: கார்த்திக் சிதம்பரம்
எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைவதை வன்மையாக கண்டிக்கிறேன் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறியிருப்பது...

சிவகங்கை மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் - Karthi Chidambaram M.P.
மதுரை: எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைவதை வன்மையாக கண்டிக்கிறேன். அது தொகுதி மக்களுக்கு நடக்கும் அநீதி, அதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. ராஜிநாமா செய்வார்களுக்கு இடைத்தேர்தலில் சீட்டும் வழங்கக்கூடாது என்று சிவகங்கை மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 25 பேர் தவெகவில் இணைய தயாராக இருக்கின்றனர் என அமைச்சர் செங்கோட்டையன் பேசியிருந்த நிலையில், அதனை வன்மையாக கண்டிப்பதாக கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
மதுரை மகபூப்பாளையத்தில் உள்ள காங்கிரஸ் நிர்வாகியின் இல்லத்திற்கு திங்கள்கிழமை வருகை தந்த கார்த்திக் சிதம்பரம் எம்.பி. செய்தியாளர்களுடன் பேசியதாவது:
தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்கும்; பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்கத் தேவையில்லை. இவர்ளுக்கு மேலும் எந்த எம்.ஏல்.ஏ.க்களும் தேவையில்லை. இவர்களுக்கே 106 பேர் உள்ளனர். மற்ற கட்சியில் இருந்து 11 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்களைத் தவிர்த்து யாரும் அரசு அமைக்கப்போவதில்லை. எம்.எல்.ஏ.க்களை ராஜிநாமா செய்ய வைத்து தவெகவில் இணைப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அது தொகுதி மக்களுக்கு நடக்கும் அநீதி, அதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. இது அவர்களுக்கு தேவையும் இல்லை. ராஜிநாமா செய்பவர்களுக்கு இடைத்தேர்தலில் சீட்டும் வழங்கக்கூடாது.
நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஒத்திவைத்தும் கூட்டத் தொடர் முடித்து வைக்காமல் இருப்பது குறித்த கேள்விக்கு, அதுகுறித்து எனக்கு தெரியாது, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சிறப்புக் கூட்டத் தொடர் கூட்டியதுபோல இந்த ஆண்டும் கூட்டுவார்கள் என்று நினைக்கிறேன்.
தவெக அமைச்சர்கள் முதல்வர் விஜய் அடுத்த பிரதமர் என்று சொல்வது குறித்த கேள்விக்கு, எல்லா கட்சிகளுக்கும் ஆசை, கனவு, லட்சியம் உண்டு. அதை தடுப்பதற்கு சட்டம் எதுவும் போடமுடியாது, அவரவரின் விருப்பங்களை சொல்லிக் கொள்கிறார்கள். தங்கள் கட்சித் தலைவரின் அபிமானியைப் பற்றி பேசுகிறார்கள். அரசியல் கள நிலவரம் என்ன என்பது குறித்து எங்களுக்குத் தெரியும். 543 தொகுதிகளில் 272 தொகுதிகளில் எந்த கூட்டணி வெற்றி பெறுகிறதோ, எந்த கட்சி வெற்றி பெறுகிறதோ, அந்த கட்சியின் தலைவர்தான் நாட்டின் பிரதமர்.
எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்குவது குறித்த கேள்விக்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்கப்படவில்லை என்றாலும், கார் வசதி உள்ளது. எனவே வசதி இருப்பவர்கள் கார் வாங்குவதை தவிர்க்கலாம்.
தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது, மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்த கேள்விக்கு, கர்நாடகாவில் 3 தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் முழுமையான விசாரணைக்கு பின்தான் தெரியும். கர்நாடகத்துக்கும் தமிழகத்துக்கும் தீர்க்கப்படாத பிரச்னைகள் எதுவும் இல்லை. காவிரி நீர் மேலாண்மை வாரியத்தின் உத்தரவின் அடிப்படையில் இரு மாநிலங்களிலும் செயல்பட வேண்டும் என விரும்புகிறேன்.
திமுக கட்டமைப்பை மாற்றி அமைப்பது குறித்த கேள்விக்கு, இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப திமுகவின் கட்டமைப்பை மாற்றி அமைக்கிறார்கள். திமுக 75 ஆண்டுகள் கட்சி. எனவே திமுகவையும், தமிழக வெற்றிக் கழகத்தையும் ஒப்பிட முடியாது.
தொகுதி மறுவரையறை குறித்து அமித்ஷா நிகழ்ச்சியில் மாற்றி பேசியது குறித்த கேள்விக்கு, சட்டப்பேரவையில் பேசியது தான் அரசின் நிலைப்பாடு. தவெக அரசு முன் அனுபவம் இல்லாத அரசு, அதிகாரிகள் கொடுப்பதை வாசித்து விடுகிறார்கள். பிரதமர் பேசுவதாக இருந்தால் கூட அதிகாரிகள் தயார் செய்து, மூத்த அமைச்சர்கள் திருத்தம் செய்த பிறகு தான் பிரதமர் பேசுவார், ஆனால் தவெகவுக்கு அந்த கட்டமைப்பு இல்லாத காரணத்தால் இதுபோல் நடக்கிறது. அதை மாற்றிக் கொள்ள வேண்டும்.
தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் குறித்த கேள்விக்கு, பிறந்த குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்குவதற்கு பதில் மகளிர் உரிமைத்தொகையை ரூ.2000 ஆக உயர்த்தி வழங்கலாம்.
தவெக - பாஜக இடையே இணக்கமான சூழல் உள்ளதாக சிபிஐஎம் தெரிவித்துள்ள கருத்துக்கு, மத்திய அரசுடன் மாநில அரசு பரஸ்பர உறவோடு இருப்பது நல்லதுதான்.
திமுக - பாஜக கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளது. தொகுதி மறுவரையறை என்ற வலையில் சிக்க வாய்ப்பு உண்டு. தொகுதி மறுவரையறை கொண்டு வந்தால் தமிழ்நாட்டுக்கு நடக்கும் அநீதி.
விஜய் அரசியலுக்கு வந்தது போல தனுஷ், சிம்பு அரசியலுக்கு வரப்போவதாக வெளியாகும் தகவல் குறித்த கேள்விக்கு, நான் மூன்று பேரின் படத்தையும் பார்ப்பதில்லை என்று பதிலளித்தார்.
Summary
I strongly condemn MLAs resigning and joining TVK: Karthi Chidambaram
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






