
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது பற்றி...
ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் - x / lokbhavan TN
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கும் மசோதாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணிகளில் நேரடி பணி நியமனம் வழியே புதிதாக நிரப்பப்படும் பணி நியமனங்களில், முழுமையாக தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவிகிதம் முன்னுரிமை அளிக்க வகை செய்யும் திருத்த மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்தாண்டு நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கும் திருத்தச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்து ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் அரசாணை வெளியிட்டுள்ளார்.
இனிமேல் புதிதாக நிரப்பப்படும் பணி நியமனங்களுக்கு மட்டுமே இந்த திருத்தச் சட்டம் செல்லுபடியாகும் என்று சட்டத் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1 ஆம் வகுப்பு வகுப்பு முதல் அரசு வேலைக்கான வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதி வரையில் முழுவதுமாக தமிழ் வழியில் கல்வி பயின்றவர்கள் மட்டுமே முன்னுரிமை வழங்கப்படத் தகுதியுடையவர்கள்.
இதர மொழிகளைப் பயிற்று மொழியாக (Medium of instruction) கொண்டு பயின்று, தேர்வுகளை மட்டும் தமிழில் எழுதியவர்கள், இம்முன்னுரிமை ஒதுக்கீட்டிற்கு தகுதியுடையவர்கள் அல்லர்.
1 ஆம் வகுப்பில் பள்ளியில் சேராமல், வயதின் அடிப்படையில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 2 முதல் 8 வரையிலான வகுப்புகளில் நேரடியாக பள்ளிகளில் சேர்ந்து, தமிழ்மொழியினைப் பயிற்று மொழியாகக் கொண்டு பயின்று தேர்ச்சி பெற்றவர்களும், பிற மாநிலங்களில் தமிழ்மொழியினைப் பயிற்று மொழியாகக் கொண்டு பயின்று, பின்னர் தமிழ் நாட்டில் தங்களது கல்வியினை, சேரும் வகுப்பிலிருந்து தொடர்ந்து தமிழ் வழியில் பயின்றவர்களும் மேற்படி முன்னுரிமை வழங்கப்படத் தகுதியுடையவர்கள் ஆவர்.
பள்ளிக்குச் செல்லாமல் நேரடியாக தனித்தேர்வர்களாக தமிழ் வழியில் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றவர்கள் மேற்படி முன்னுரிமை வழங்கப்படத் தகுதியுடையவர்கள் அல்லர்.
பள்ளிக்குச் சென்று பள்ளியில் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு போன்ற பொதுத்தேர்வுகள் எழுதி, அதில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில் தேர்ச்சி பெறாமல், தனித்தேர்வராக தேர்வெழுதி அப்பாடங்களில் தேர்ச்சி பெற்று, தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் தமிழ் வழியில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மேற்படி முன்னுரிமை வழங்கப்படத் தகுதியுடையவர்கள் ஆவர்.
பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி வரை அவர்கள் பயின்ற சம்பந்தப்பட்ட அனைத்து கல்வி நிலையங்களிலிருந்தும் தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்களைப் பெற வேண்டும்.

Summary
Priority in government jobs for those educated in the Tamil medium! Governor grants assent to the bill!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






