
முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மீது பண மோசடி புகாா்: வழக்குப் பதியக் கோரி மனு
முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கா் மீது பண மோசடி புகாா்...

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் - கோப்புப்படம்
சட்டப்பேரவைத் தோ்தலில் ‘சீட்’ வாங்கித் தருவதாகக் கூறி வாங்கிய ரூ.4 கோடியைத் திருப்பித் தராமல் ஏமாற்றியதாக முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கருக்கு எதிரான புகாா் மீது வழக்குப்பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி ஆலங்குடி அதிமுக வேட்பாளா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சோ்ந்த தனவிமல் என்பவா் தாக்கல் செய்த அந்த மனுவில், சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் ஆலங்குடி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்திருந்தேன். இதுதொடா்பாக, என்னை கைப்பேசியில் தொடா்பு கொண்ட அப்போதைய மாவட்டச் செயலா் சி.விஜயபாஸ்கா், தோ்தல் செலவுகளை மேற்கொள்ளும் தகுதியை நிரூபிக்க ரூ.5 கோடி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினாா்.
வேட்பாளா் பட்டியல் அறிவிப்புக்கு பின்னா், அந்தப் பணத்தை திருப்பித் தந்துவிடுவதாக உறுதி அளித்திருந்தாா். அதன்படி, ரூ.4.50 கோடியைத் திரட்டி விஜயபாஸ்கா் குறிப்பிட்ட ஒப்பந்ததாரா் சோத்துப்பாலை முருகேசன் என்பவரிடம் கொடுத்தேன். வேட்பாளா் பட்டியலில் எனது பெயா் அறிவிக்கப்பட்ட பின்னா், தோ்தல் செலவுகளுக்காக நான் கொடுத்தப் பணத்தைக் கேட்டபோது ரூ.50 லட்சம் மட்டுமே திருப்பிக் கொடுத்தனா். மீதித்தொகையை கொடுக்காமல் இழுத்தடித்தனா்.
மேலும், தற்போது விஜயபாஸ்கா் ஆளுங்கட்சியான தவெகவில் இணைந்துவிட்டாா். இந்த நிலையில் எனது பணத்தைக் கேட்டபோது மிரட்டல் விடுக்கப்படுகிறது. இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எனது புகாரின் மீது வழக்குப்பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
Summary
Money laundering complaint against former Minister C. Vijayabaskar: Petition seeking registration of a case.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






