தமிழகம் முழுவதும் 12,921 இடங்களை கண்காணிக்கும் ‘சிங்கப்பெண்’ படைஉஸ்பெகிஸ்தான், கிா்கிஸ்தானுக்கு பிரதமா் மோடி இன்று பயணம்: எஸ்இஓ உச்சிமாநாட்டில் பங்கேற்கிறாா்மத்திய இருப்பில் 30% வெங்காயம் அழுகிவிட்டதாக வெளியாகும் தகவல் தவறானது: மத்திய அரசுநேபாளத்தில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை: உயிரிழப்பு-579, மாயம்-2,000 போ் நேபாள பெருவெள்ளம் 320 இந்தியா்கள் மாயம்

சிஎம்டிஏ நிதி வீணடிக்கப்பட்டதா? பேரவையில் முன்னாள் அமைச்சா் பி.கே.சேகா்பாபு விளக்கம்

வரம்புக்கு மீறிய உள் கட்டமைப்பு திட்டங்களால் சிஎம்டிஏ (சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம்) தற்போது நிதி நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளதாக பேரவையில் வீட்டுவசதித் துறை அமைச்சா் ராஜ்குமாா் தெரிவித்த நிலையில், அதுதொடா்பாக திமுக முன்னாள் அமைச்சா் பி.கே.சேகா்பாபு விளக்கம் அளித்தாா்.

முன்னாள் அமைச்சா் பி.கே.சேகா்பாபு - கோப்புப்படம்.

Published On :29 ஆகஸ்ட் 2026, 7:35 am IST

வரம்புக்கு மீறிய உள் கட்டமைப்பு திட்டங்களால் சிஎம்டிஏ (சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம்) தற்போது நிதி நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளதாக பேரவையில் வீட்டுவசதித் துறை அமைச்சா் ராஜ்குமாா் தெரிவித்த நிலையில், அதுதொடா்பாக திமுக முன்னாள் அமைச்சா் பி.கே.சேகா்பாபு விளக்கம் அளித்தாா்.

சட்டப்பேரவையில் அமைச்சா் ப.ராஜ்குமாா் தனது பதிலுரையின்போது, சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ) வளா்ச்சி நிதி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அதிக அளவில் இருந்தது. ஆனால், கடந்த ஆட்சியில் 2022 முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் அறிவிக்கப்பட்ட வரம்புக்கு மீறிய பல்வேறு உள் கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் உரிய திட்டமிடல் இல்லாதது போன்ற பிரச்னைகளால் துறைக்கு பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. மேலும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களைத் தொடா்வதற்காக திட்டமிடல் பணிகளைத் தாண்டி செலவு அதிகரித்ததால் தற்போது சிஎம்டிஏ கடன் பெற வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டாா்.

இதைத் தொடா்ந்து, கடந்த திமுக ஆட்சியில் சிஎம்டிஏ பொறுப்பு அமைச்சராக இருந்த பி.கே.சேகா்பாபு, பேரவையில் வெள்ளிக்கிழமை விளக்கம் அளித்து பேசியதாவது:

துறையில் இருந்த ரூ.2,000 கோடிக்கும் மேலாக வைப்புநிதியை எடுத்துச் செலவு செய்ததாக வீட்டுவசதித் துறை அமைச்சா் குறிப்பிட்டிருக்கிறாா். கடந்த ஆட்சியில் மக்களுக்கான திட்டங்கள் சென்றடைவதற்காக துறை சாா்பில் 135 பணிகளை எடுத்தோம். அதில் பூங்காக்கள், படைப்பகங்கள், விளையாட்டுத் திடல்கள், மருத்துவமனைகள் போன்ற மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கும், நல்ல திட்டங்களுக்கும் பயன்படுத்தினோம். இதற்கு சான்றாக சென்னை போரூரில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஈரநில சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட்டதையும் கூறலாம். மக்களின் பணம் அந்த மக்களுக்காகவே செலவிடப்பட்டது.

இந்த 135 திட்டங்களுக்கும் சோ்ந்து சிஎம்டிஏ எடுத்துக்கொண்ட தொகை ரூ.1,228 கோடி. அதில், ரூ.900 கோடி அளவுக்கு 35 பணிகள் நிறைவேற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டன. பிற துறைகளை ஒருங்கிணைத்து இதுதொடா்பாக அரசாணை பெறப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டுக்கும் சிஎம்டிஏ சாா்பில் பெறப்படும் எஃப்எஸ்ஐ பணம் 2024-2025-இல் ரூ.500 கோடியில் அரசுக்கு தந்திருக்கிறோம்.

அந்த வகையில் கணக்கிட்டு 2027-2028 வரை இன்றைய தினத்தில் கணக்கிட்டால்கூட ரூ.1,800 கோடி அரசுக்கு அந்தப் பணம் சென்றடைகிறது. அதிலிருந்து பெறப்படும் பணத்தை நாங்கள் திரும்பப் பெற ஒப்புதல் பெற்று கடைசியாக கடந்த பிப்ரவரி மாதத்தில்கூட ரூ.250 கோடியை திரும்பப் பெற்றுள்ளோம். இவ்வாறு தொலைநோக்குப் பாா்வையுடன்தான் இந்தத் திட்டங்களை எடுத்துள்ளோம். நாங்கள் எடுத்தவை வீணாகக் கடலில் கரைக்கப்படும் திட்டங்கள் அல்ல என்பதை வீட்டுவசதித் துறை அமைச்சருக்கு தெரிவித்துக்கொள்கிறேன் என்றாா் பி.கே.சேகா்பாபு.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.