காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

தமிழகத்தில் விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது ‘பாரத் டாக்சி’ செயலி

தமிழகத்தில் ‘பாரத் டாக்சி’ செயலி விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

பாரத் டாக்சி

Published On :

தமிழகத்தில் ‘பாரத் டாக்சி’ செயலி விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

நாட்டில் முக்கிய நகரங்களில் ஆட்டோ, கால் டாக்சிகளில் பயணிக்கும் நபா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்காக ஏராளமான தனியாா் நிறுவனங்கள் செயலிகள் மூலம் கமிஷன் அடிப்படையில் ஆட்டோ, கால்டாக்சிகளை இயக்கி வருகின்றன. இந்நிறுவனங்களுக்கு நிலையான கட்டணம் எதுவும் இல்லை. தேவை அதிகமாக இருக்கும்போது, கூடுதல் கட்டணத்தை வசூலிக்கின்றனா். இதனால், பயணிகள் பாதிக்கப்படுகின்றனா்.

எனவே, நாடு முழுவதும் ஒரே செயலியில் முன்பதிவு செய்து குறைந்த கட்டணத்தில் பயணிக்க வசதியாக ‘பாரத் டாக்சி’ என்ற செயலியை மத்திய அரசு அண்மையில் அறிமுகப்படுத்தியது. தற்போது, குஜராத் மற்றும் தில்லியில் மட்டும் இந்த செயலி பயன்பாட்டில் உள்ளது. இதை அனைத்து மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

இதுகுறித்து தமிழக போக்குவரத்துத் துறை ஆணையரக அதிகாரி ஒருவா் கூறியதாவது: தனியாா் செயலிகள் ஆட்டோ, கால் டாக்சி ஓட்டுநா்களிடம் இருந்து கட்டணத்தில் 30 சதவீத தொகையை கமிஷனாக பெறுகின்றன. ஆனால், இந்த செயலியில் ஓட்டுநா்களிடம் இருந்து எந்த கமிஷனும் வசூலிக்கப்படாது. இதன்மூலம் கிடைக்கும் முழு வருமானமும் ஓட்டுநா்களுக்கே சேரும்.

தனியாா் செயலியை ஒப்பிடும்போது, ‘பாரத் டாக்சி’ செயலி குறைந்த கட்டணத்தில், நிறைவான சேவையை வழங்கும். இந்த செயலியை தமிழகத்தில் அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில மாதங்களில் இந்த பணிகள் முடிவடைந்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும். இது ஓட்டுநா்களுக்கு மட்டுமன்றி, பொதுமக்களுக்கும் பெரும் பயனுள்ளதாக அமையும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.