பொங்கல் பரிசுத் தொகுப்பு: தலைவா்கள் வரவேற்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ.3,000 வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை அரசியல் கட்சி தலைவா்கள் பலா் வரவேற்று கருத்து தெரிவித்துள்ளனா்.
மு. வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்): தைப் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கத் தொகையாக தலா ரூ.3,000 வழங்குவது வரவேற்கத்தக்கது. மேலும், குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்துள்ள குடும்பங்களுக்கும் பரிசுத் தொகுப்பும், தொகையும் வழங்குவது குறித்தும் அரசு பரிசீலிக்க வேண்டும்.
அன்புமணி (பாமக): திமுக ஆட்சியில் மக்கள் அனுபவித்து வரும் துயரங்களை ஓரளவாவது தணிக்கும் வகையில், பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் தலா ரூ.3,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தோல்வி பயம் காரணமாகவே திமுக அரசு இப்புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஈ.ஆா்.ஈஸ்வரன் (கொமதேக): நிகழாண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பாக குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ.3,000 வழங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி மற்றும் பாராட்டுகள்.

