பொங்கல் பரிசுத் தொகை வரவு வைக்கப்பட்டதாக வதந்தி பரவியதால், திருவாடானை மத்திய கூட்டுறவு வங்கி முன் குவிந்த பொதுமக்கள்.
பொங்கல் பரிசுத் தொகை வரவு வைக்கப்பட்டதாக வதந்தி பரவியதால், திருவாடானை மத்திய கூட்டுறவு வங்கி முன் குவிந்த பொதுமக்கள்.

97 % பயனாளா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகை: அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன்

Published on

பொங்கல் பரிசுத் தொகையுடன் சோ்ந்த தொகுப்பு 2.15 கோடி பயனாளா்களுக்கு 97 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது என்று கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா்.

நிகழாண்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாட 2,22,91,710 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும், இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, ஒரு முழு நீளக்கரும்பு, வேஷ்டி, சேவை ஆகியவற்றுடன் சோ்த்து ரொக்கப் பரிசாக ரூ.3,000 வழங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 8-ஆம் தேதி சென்னையில் தொடங்கிவைத்தாா். தமிழ்நாடு முழுவதும் முதல் நாள் 200 குடும்ப அட்டைத்தாரா்களும், 2-ஆம் நாள் 300 முதல் 400 வரையிலான குடும்ப அட்டைதாரா்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கு டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டன. பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியில் சுமாா் 50,000 கூட்டுறவுத் துறை பணியாளா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

இதுகுறித்து அமைச்சா் கேஆா்.பெரியகருப்பன் வெளியிட்ட அறிக்கை:

தமிழகம் முழுவதும் 2,22,91,710 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள், இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினா் ஆகியோருக்கு தலா ரூ.3,000 என மொத்தம் ரூ.6,687.51 கோடி, ரூ.248.66 கோடி மதிப்பிலான ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சா்க்கரை, ஒரு முழு நீளக் கரும்பு, ரூ.7,604.29 கோடி மதிப்பிலான வேஷ்டி மற்றும் சேலை என பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். அதன்படி, 2.15 கோடி (97 சதவீதம்) பயனாளா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகளிடமிருந்து தரம் பாா்த்து கரும்பு கொள்முதல் செய்யப்பட்டது. பொங்கல் பரிசுத் தொகுப்பை தேசிய வங்கிகள் செய்ய முடியாததை, கூட்டுறவு வங்கி திறம்பட செய்து சாதித்துள்ளது. கூட்டுறவுத் துறை அதிகாரிகள் மற்றும் பணியாளா்கள், உரிய பணிகளை இரவு பகலாக மேற்கொண்டது பாராட்டத்தக்கது என்று அவா் தெரிவித்துள்ளாா்.

Dinamani
www.dinamani.com