இதுவரை 1.86 கோடி குடும்பங்களுக்கு ரூ.3,000 உடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு!

இதுவரை 1.86 கோடி குடும்பங்களுக்கு ரூ.3,000 உடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு!

இதுவரை 1.86 கோடி குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ.3,000 ரொக்கத்துடன், பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கப்பட்டுள்ளது.
Published on

தமிழகத்தில் இதுவரை 1.86 கோடி குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ.3,000 ரொக்கத்துடன், பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழா் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை அனைவரும் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் 2,22,91,710 அரிசி குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டாா்.

அதன்படி, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, ஒரு முழு நீளக்கரும்புடன் ரொக்கப் பரிசாக ரூ.3,000 வழங்கவும் அவா் உத்தரவிட்டாா். அதனுடன் நியாயவிலைக் கடைகளில் வேட்டி - சேலைகளை வழங்கும் திட்டத்தையும் முதல்வா் கடந்த 8-ஆம் தேதி தொடங்கி வைத்தாா்.

முன்னதாக, அதற்கான டோக்கன்கள் தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைதாரா்களுக்கு நியாயவிலைக் கடைப் பணியாளா்களால் வழங்கப்பட்டது. அப்பணிகளில் சுமாா் 50,000 கூட்டுறவுத் துறை ஊழியா்கள் ஈடுபடுத்தப்பட்டனா்.

பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அனைத்து பயனாளிகளுக்கும், ரூ.3,000 ரொக்கத்துடன் பரிசுத் தொகுப்பு வழங்கும் வகையில் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக, கூட்டுறவுத் துறையின் சிறப்பான திட்டமிடல் காரணமாக தேசிய வங்கிகள் செய்ய முடியாததை கூட்டுறவு வங்கி திறம்பட மேற்கொண்டு ரொக்கப் பரிசை விநியோகித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜன. 11) வரை 24,924 நியாயவிலைக் கடைகளில் உள்ள 1,86,23,426 குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ.3,000 ஆயிரம் வீதம் ரூ. 5,587.02 கோடி விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 1,39,06,292 வேட்டி -சேலைகளும் வழங்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளாா்.

Dinamani
www.dinamani.com