

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைப்போம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
அரசமைப்பின் மாண்பை, ஹிந்துக்களின் நம்பிக்கையை திமுக ஆட்சி சீர்குலைத்திருப்பதாகவும், தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் விமர்சித்தார்.
மதுரையில் தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் என்ற பிரசாரப் பயணத்தை நயினாா் நாகேந்திரன் அக். 12-ல் தொடங்கினாா். அனைத்து மாவட்டங்களிலும் இப்பயணம் முடிவடைந்த நிலையில், இதன் நிறைவு விழா புதுக்கோட்டையில் இன்று (ஜன. 4) நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் பள்ளத்திவயல் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் அமித் ஷா, பியூஷ் கோயல், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக பாஜக முன்னாள் தலைவா்கள் பொன். ராதாகிருஷ்ணன், அண்ணாமலை உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் அமித் ஷா பேசியதாவது:
’’தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி வேண்டுமா? வேண்டாமா? 1998, 2019 தேர்தல்களில் நாம் ஒன்றாக இணைந்து போட்டியிட்டோம். 2026 தேர்தலையும் சந்திப்போம்.
2004ஆம் ஆண்டு தனியாக போட்டியிட்ட அதிமுக, பாஜக வாக்குகளை இணைத்தால் 26 தொகுதிகளில் வென்றிருப்போம். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் எப்படியாவது திமுக கூட்டணி ஆட்சியை நாம் ஒழித்துக்கட்டுவோம்.
உதயநிதியை முதல்வராக்குவதே மு.க. ஸ்டாலினின் நோக்கமாக உள்ளது. கருணாநிதி, மு.க. ஸ்டாலின், அடுத்து உதயநிதி. இத்தகைய குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்டுவோம்.
திமுக ஆட்சியில் உள்ள அமைச்சர்கள் பேரில் ஊழல் வழக்குகள். ஊழலுக்கு பேர்போன கட்சி திமுக. சிறைக்குச் சென்ற பின்னரும் 248 நாள்கள் அமைச்சராக இருந்தார் ஒருவர் (செந்தில் பாலாஜி).
கருப்பு பணத்தை வெள்ளையாக்குவது, மணல் கொள்ளையில் ஒரு தலைவரின் பெயர் உள்ளது. தமிழ்நாட்டில் எந்தவொரு வேலை நடக்கவேண்டுமென்றாலும் 20% கமிஷன் கொடுக்க வேண்டும் என்ற நிலை உருவாகிவிட்டது.
இப்படி ஊழல் நிறைந்த அமைச்சரவை, அமச்சர்களை வைத்துக்கொண்டு தமிழ்நாடு வளர்ச்சி அடையும் என்பதை எப்படி நம்புவது?
ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்படுகின்றனர். அரசு ஊழியர்கள் தெருக்களில் இறங்கி போராடும் அவல நிலை. விவசாயிகளையும் திமுக அரசு கொடுமைப்படுத்துகிறது. மற்ற மாநிலங்களின் குப்பைக் கிடங்காக தமிழகத்தை மாற்றியுள்ளது.
பனாரஸ் பல்கலைக் கழகத்தில் பாரதி பெயரில் இருக்கை, திருக்குறளை 13 மொழிகளில் மொழியாக்கம் செய்தவர் பிரதமர் நரேந்திர மோடி. ஐபிஎஸ், ஐஏஎஸ் தேர்வுகளை தமிழில் அறிமுகம் செய்தவர் பிரதமர் மோடிதான். ரயில் நிலைய அறிவிப்பில் தமிழ் மொழியை உறுதி செய்தவரும் பிரதமர் மோடிதான். தமிழ் வளர்ச்சிக்காக பெரும் பங்காற்றுகிறது நரேந்திர மோடி தலைமையிலான அரசு.
2004 - 2014 வரை ஆட்சி செய்தவர்கள் மூலம் தமிழ்நாட்டுக்கு ரூ. 1.51 ஆயிரம் கோடி மட்டுமே கிடைத்தது. ஆனால், 2014 - 2024 வரை தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசு ரூ. 11 லட்சம் கோடியை வழங்கியுள்ளது.
ஹிந்துக்களின் சமய நம்பிக்கை, வழிபாட்டு முறைகளுக்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாடு அரசு செயல்படுகிறது. அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜையின்போது தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஹிந்துக்களின் ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. சிலைகளை கரைக்கவும் தடை விதிக்கப்படுகிறது.
அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாத்த செங்கோலை நாடாளுமன்றத்தில் நிறுவி அழகுபார்க்கிறார் பிரதமர் மோடி. 2025-ல் இந்தியா கூட்டணி தோல்வியைத் தழுவியது.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வெற்றி முகம். 2026-ல் நடக்கவுள்ள தேர்தலில் தமிழ்நாட்டிலும் மேற்கு வங்கத்திலும் ஆட்சி அமைப்போம். ஏப்ரலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி மலரும்’’ என அமித் ஷா குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.