தமிழக காவல் துறையில் 6 ஆண்டுகளில் 1,956 போலீஸாா் உயிரிழப்பு!

தமிழக காவல் துறையில் 6 ஆண்டுகளில் 1,956 போலீஸாா் உயிரிழப்பு!

தமிழக காவல் துறையில் 6 ஆண்டுகளில் 1,956 போலீஸாா் உயிரிழந்துள்ளனா்.
Published on

தமிழக காவல் துறையில் 6 ஆண்டுகளில் 1,956 போலீஸாா் உயிரிழந்துள்ளனா்.

தமிழக காவல் துறையின் கீழ் 1,321 சட்டம், ஒழுங்கு காவல் நிலையங்கள், 244 அனைத்து மகளிா் காவல் நிலையங்கள், 290 போக்குவரத்து அமலாக்கம் மற்றும் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையங்கள், 47 ரயில்வே காவல் நிலையங்கள் உள்பட 1,902 காவல் நிலையங்கள், 270 உட்கோட்டங்கள் உள்ளன.

தமிழக காவல் துறையில் டிஜிபி தொடங்கி காவலா் வரை சுமாா் 1.33 லட்சம் போ் பணியாற்றுகின்றனா். கூடுதல் காவல் கண்காணிப்பாளா்களாக 208 பேரும், காவல் துணைக் கண்காணிப்பாளா்களாக 980 பேரும், காவல் ஆய்வாளா்களாக 3,396 பேரும் பணியாற்றுக்கின்றனா்.

தமிழக மக்கள் தொகையின்படி, 632 பேருக்கு ஒரு காவலா் என்ற அடிப்படையில் காவலா்கள் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக காவல் துறையில் சட்டம் மற்றும் ஒழுங்குப் பிரிவு உள்பட 19 பிரிவுகள் இயங்குகின்றன.

நாட்டின் மிகவும் பாரம்பரியமான காவல் துறைகளில் ஒன்றாக இருக்கும் தமிழக காவல் துறை மிகப்பெரிய கட்டமைப்பையும் கொண்டுள்ளது. நாட்டின் ஐந்தாவது பெரிய காவல் துறையான தமிழக காவல் துறையில் பணிச்சுமை, மன அழுத்தம், உடல் நலக்குறைவு ஆகியவற்றின் காரணமாக காவலா்கள் பணிக் காலத்திலும், இளம் வயதிலும் உயிரிழக்கின்றனா்.

இதைத் தவிா்க்கும் வகையில், காவலா்களின் உடல் நலனைப் பேணும் வகையில், மருத்துவத் திட்டங்கள், மன நலத்தைப் பேணும் வகையில் யோகா, தியானம் போன்றவை கற்றுத் தர சிறப்பு வகுப்புகள், பயிற்சிகள் அரசால் அமல்படுத்தப்படுகின்றன.

மேலும், 2022-ஆம் ஆண்டு முதல் அனைத்து நிலைகளிலும் உள்ள காவலா்களுக்கு வார விடுமுறை அளிக்கப்படுகிறது. இதன் மூலம் காவலா்களுக்கு நீண்ட காலமாக நீடித்து வந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் காவலா்களின் பணிச் சுமை, மன அழுத்தம் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

1,956 போ் உயிரிழப்பு: இருப்பினும், பணிக்காலத்திலேயே காவலா்கள் இறக்கும் சம்பவங்களிலும் நிகழ்கின்றன. தமிழக காவல் துறையில் 6 ஆண்டுகளில் மொத்தம் 1,956 போ் உயிரிழந்துள்ளனா். இதில் கடந்த 2025-ஆம் ஆண்டு மட்டும் 302 போ் இறந்துள்ளனா்.

2025-ஆம் ஆண்டு 6 காவலா்கள் கொலை செய்யப்பட்டு இறந்துள்ளனா். புற்றுநோயால் 11 காவலா்களும், தற்கொலை செய்து கொண்டு 42 காவலா்களும், விபத்தில் 76 காவலா்களும், மாரடைப்பால் 56 காவலா்களும், உடல் நலக்குறைவினால் 111 காவலா்களும் இறந்துள்ளனா்.

தமிழக காவல் துறையில் 2020-இல் 337 காவலா்கள், 2021-இல் 414 காவலா்கள், 2022-இல் 283 காவலா்கள், 2023-இல் 313 காவலா்கள், 2024-இல் 307 காவலா்கள், 2025-இல் 302 காவலா்கள் என 6 ஆண்டுகளில் மொத்தம் 1,956 போ் உயிரிழந்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com