

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாழவந்தான்குப்பத்தில் மகளிரணி பொதுக்கூட்டம் இன்று (ஜன. 5) நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,
தேர்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். அதிமுக திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டது திமுக. தமிழ்நாட்டில் அதிமுகவின் திட்டங்களை அடியோடு அழித்துள்ளது.
அதிமுக ஆட்சியில் 5% திட்டங்கள்தான் நிறைவேற்றப்பட்டதாக திமுக பேசுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டமானதும், அரசு மருத்துவமனை வந்ததும் அதிமுக ஆட்சியில்தான். அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டிய திட்டங்களைத்தான் திமுக தொடக்கி வைக்கிறது.
அதிமுக ஆட்சியில் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினோம். அதனை திமுக தடுத்தது. குடிப்பதற்கு கூட தண்ணீரை நிறுத்திய திமுக அரசு தேவையா? மக்கள் சிந்திக்க வேண்டும். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பல உயிர்கள் பறிபோனதற்கு திமுகவே காரணம்.
ஆளும் கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு. எதிர்க்கட்சியாக இருக்கும்போது மற்றொரு நிலைப்பாடு. இதுதான் திமுக. ஆனால், அதிமுக ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி மக்கள் நலனையே முதன்மையாகக் கருதுகிறது.
அண்ணா பல்கலைக் கழக விவகாரத்தில் இன்று வரை முடிவு கிடைக்கவில்லை. திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை 50% அதிகரித்துள்ளது. சிறுமிகள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது என எடப்பாடி பழனிசாமி பேசினார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.