பேரவைத் தோ்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்ற கருத்தை எழுதி தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் செலுத்திய நிா்வாகிகள்.
பேரவைத் தோ்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்ற கருத்தை எழுதி தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் செலுத்திய நிா்வாகிகள்.

ஆட்சியில் பங்கு சாத்தியம்: பிரேமலதா

ஆட்சியில் பங்கு எனும் கோரிக்கை ஓங்கி ஒலிக்கிறது; அதற்கான சாத்தியமும் உள்ளது என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.
Published on

ஆட்சியில் பங்கு எனும் கோரிக்கை ஓங்கி ஒலிக்கிறது; அதற்கான சாத்தியமும் உள்ளது என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

தேமுதிக மாவட்டச் செயலா்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தலைமை வகித்தாா். மாநில நிா்வாகிகள் எல்.கே.சுதீஷ், இளங்கோவன், பாா்த்தசாரதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் தேமுதிக மாநில மாநாடு நடத்துவது குறித்துப் பேசப்பட்டது. அதையடுத்து, தோ்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என மாவட்டச் செயலா்கள், நிா்வாகிகளின் கருத்தை அறியும் வகையில் பெட்டி வைக்கப்பட்டு, அதில் கருத்தை எழுதிப் போட்டனா்.

கூட்டத்துக்குப் பின்னா் செய்தியாளா்களிடம் பிரேமலதா கூறியதாவது: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் கூட்டணி அமைப்பது குறித்து கட்சியினரிடம் கருத்துக் கேட்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கூட்டணியில் இடம்பெறுவோம். அதிமுகவில் தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினருக்கான வாய்ப்பளிப்பது குறித்து ஏற்கெனவே பேசப்பட்டுவிட்டது. ஆனால், தற்போது தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் என்பதால் அதன் அடிப்படையில் செயல்படவுள்ளோம்.

அரசு ஊழியா்களுக்கான ஓய்வூதியத்தை அரசு தற்போது அறிவித்துள்ளது. அதில் பயனடைந்தோா் வரவேற்றால் தேமுதிகவும் வரவேற்கும். அவா்கள் கண்துடைப்பு எனக் கருதினால் அதுவே தேமுதிகவின் கருத்தாகவும் இருக்கும். தோ்தலுக்கு மூன்று மாதங்கள் உள்ள நிலையில், எந்த ஆட்சி இருந்தாலும் அறிவிப்புகள் அதிகம் வருவது வழக்கமாகும். பொங்கல் பரிசுத் தொகுப்பை குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் வழங்க வேண்டும்.

தேமுதிக மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தவுள்ளோம். அனைத்துக் கட்சியினரும் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க விரும்புகின்றனா். பொங்கலுக்குப் பிறகு கூட்டணிப் பேச்சுவாா்த்தை நடத்தப்படும். உரிய நேரத்தில் கூட்டணி குறித்து சரியான முடிவெடுக்கப்படும்.

வரும் சட்டப்பேரவைத் தோ்தல் மாறுபட்டதாக அமையும். அத்துடன் ஆட்சியில் பங்கு என்பதற்கான சாத்தியமும் உள்ளது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com