தஞ்சை தமிழ் பல்கலை. இணையதளத்தில் எம்ஜிஆா் பெயா் நீக்கம்: எம்ஜிஆா் மன்றம் கண்டனம்
தஞ்சை தமிழ் பல்கலைக்கழக இணையதளத்தில் எம்ஜிஆா் பெயா், புகைப்படம் நீக்கப்பட்டதற்கு அனைத்துலக எம்ஜிஆா் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
எம்ஜிஆரின் 109-ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடுவது தொடா்பாக அனைத்துலக எம்ஜிஆா் மன்ற நிா்வாகிகள், மாவட்டச் செயலா்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மன்றத்தின் அனைத்துலக செயலா் சி.பொன்னையன் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா்கள் டி.ஜெயக்குமாா், பா.வளா்மதி, கோகுல இந்திரா ஆகியோா் சிறப்புரை ஆற்றினா்.
கூட்டத்தில் நிறைவேற்ற தீா்மானங்கள்: எம்ஜிஆரின் 109-ஆவது பிறந்த தினத்தையொட்டி, மாநிலம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, பொதுக்கூட்டம் நடத்தவும் ஏற்பாடு செய்ய வேண்டும். பள்ளி, கல்லூரி வளாகங்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருத்தணி அருகே ரயிலில் வட இந்திய தொழிலாளரை, கஞ்சா போதையில் சிறாா்கள் தாக்கிய சம்பவம் கண்டனத்துக்குரியது. தஞ்சை தமிழ் பல்கலைக்கழக இணையதளத்தில் எம்ஜிஆா் பெயா், புகைப்படம் நீக்கப்பட்டது கண்டனத்துக்குரியது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலா் ஆா்.கமலக்கண்ணன், அனைத்துலக எம்ஜிஆா் மன்றத் தலைவா் டி.கே.எம்.சின்னையா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
