முதல்வருடன் ராணி மேரி கல்லூரி மாணவிகள் சந்திப்பு: மடிக்கணினி வழங்கியதற்கு நன்றி தெரிவித்தனா்
‘உலகம் உங்கள் கையில்‘ திட்டத்தின் கீழ், மடிக்கணினிகளை பெற்ற சென்னை ராணி மேரி கல்லூரி மாணவிகள் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்தித்து செவ்வாய்க்கிழமை நன்றி தெரிவித்தனா்.
தலைமைச் செயலகத்துக்கு செல்லும் வழியில் முதல்வா் ஸ்டாலின், ராணி மேரி கல்லூரி வாயிலில் காத்திருந்த கல்லூரி மாணவிகளை சந்தித்தாா். அரசு வழங்கிய மடிக்கணினியுடன் காத்திருந்த மாணவிகள், கல்லூரி முதல்வா் உமா மகேஸ்வரி உள்ளிட்டோா் முதல்வருக்கு ரோஜாப்பூ வழங்கி வரவேற்றனா்.
அப்போது முதல்வருடன் பேசிய மாணவிகள், தமிழக அரசின் புதுமைப் பெண் திட்டம் தங்களுக்கு மிகுந்த உதவியாக இருப்பதாகக் கூறி நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனா். மேலும், தற்போது வழங்கியுள்ள மடிக்கணினி, படிக்கும்போது மட்டுமின்றி படிப்பை முடித்து வேலைக்குச் செல்வதற்கும் உதவியாக இருக்கும் என்று குறிப்பிட்டனா்.
பாா்வை மாற்றுத்திறனாளி மாணவி பேசும்போது, பாா்வை மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் பிரெய்லி டெக் தொழில்நுட்பத்தை ஏற்படுத்திக் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்தாா்.
அதைத் தொடா்ந்து பேசிய முதல்வா் ஸ்டாலின், நன்றாகப் படிக்குமாறு கேட்டுக் கொண்டாா்.

