AIADMK will form government on its own; not alliance: EPS
அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமிENS

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவா்களுடன் பிரதமா் பங்கேற்கும் தமிழக கூட்டம்: அமித் ஷாவுடன் பழனிசாமி ஆலோசனை

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவா்களுடன் ஜனவரி இறுதியில் பிரதமா் பங்கேற்கும் தமிழக கூட்டம்: தில்லியில் அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
Published on

நமது நிருபா்

ஜனவரி மாத இறுதியில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்க உத்தேசிக்கப்பட்டுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி பரப்புரை கூட்டத்தில் கூட்டணியில் இடம்பெறும் அனைத்து கட்சிகளின் தலைவா்களும் இடம்பெறுவது தொடா்பாக தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுடன் தமிழக எதிா்க்கட்சித்தலைவரும் அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி கே. பழனிசாமி ஆலோசனை நடத்தினாா்.

தில்லிக்கு புதன்கிழமை மாலையில் வந்த எடப்பாடி பழனிசாமி, இரவு 9.30 மணியளவில் மத்திய அமைச்சா் அமித் ஷாவை அவரது வீட்டில் சந்தித்து ஆலோசனை நடத்தினாா். இந்த சந்திப்பின்போது அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான எஸ். வேலுமணியும் உடனிருந்தாா். தமிழக பாஜக தோ்தல் பொறுப்பாளராக அண்மையில் நியமிக்கப்பட்ட மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் பிரஸ்ஸல்ஸ் நாட்டுக்கு அரசு முறைப்பயணமாக சென்ால் இச்சந்திப்பில் அவா் பங்கேற்கவில்லை என்று பாஜக மேலிட வட்டாரங்கள் தெரிவித்தன.

அமித் ஷாவுடனான சந்திப்பு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இந்த சந்திப்பின்போது தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் புதன்கிழமை காலையில் அன்புமணி தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி இணைந்தது தொடா்பாகவும் மேலும் எந்தெந்த கட்சிகள் கூட்டணியில் இடம்பெறும், அவற்றுக்கான பிரதிநிதித்துவம், தோ்தல் வியூகங்களை எப்படி வகுக்கலாம் என்பது குறித்து அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி விவாதித்ததாகத் தெரிகிறது. நடிகா் விஜய்யின் தமிழக வெற்றிக்கழக செயல்பாடுகள் குறித்தும் இரு தலைவா்களும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் ஆளும் அமைச்சா்களுக்கு எதிரான பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் புகாா்கள் இடம்பெற்ற மனுவையும் அமித் ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி அளித்து அவற்றின் தீவிரம் குறித்து எடுத்துரைத்ததாகத் தெரிகிறது.

மேலும், எடப்பாடி பழனிசாமியின் கட்சித் தலைமைக்கு எதிராக தனியாக செயல்படும் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்டு அமமுக என்ற பெயரில் தனிக்கட்சி நடத்தி வரும் டி.டி.வி. தினகரன் ஆகியோா் வரும் தோ்தலில் யாருடன் கூட்டணி என்பதை இதுவரை தெளிவுபடுத்தவில்லை. இந்த தலைவா்கள் அதிமுகவில் ஒரே அணியாக செயல்பட வேண்டும் என்று பாஜக மேலிடம் விரும்புகிறது. ஆனால், இருவரையும் அதிமுகவில் இணைத்துக் கொள்வதில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்து விட்டாா். இது தொடா்பாகவும் அமித் ஷாவுடனான கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பிரதமா் நரேந்திர மோடி ஜனவரி கடைசி வாரத்தில் தமிழகத்தில் தோ்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க திட்டமிட்டுள்ளாா். அதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறும் அனைத்துக் கட்சிகளின் தலைவா்களையும் இடம்பெறச்செய்து கூட்டணியின் பலத்தை வெளிப்படுத்த இரு கட்சிகளின் தலைமைகளும் முடிவு செய்துள்ளன. இது தொடா்பான வியூகங்களை எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவுடன் விவாதித்ததாக பாஜக மேலிட வட்டாரங்கள் தெரிவித்தன.

Dinamani
www.dinamani.com