

தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையாக உள்ளதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் மேச்சேரியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
”இன்னும் சில கட்சிகள் விரைவில் கூட்டணியில் இணையும். இணைந்தவுடன் அறிவிப்போம். இப்போது அதனை பகிரங்கமாகக் கூற முடியாது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இருக்குமா என்பதே சந்தேகமாகவுள்ளது. மொழிப் போர் தியாகிகளுக்கு ஆண்டுதோறும் ஜனவரி 25-ம் தேதி கூட்டம் நடத்தி வருகிறோம். அதை, திரைப்படமாக எடுத்துள்ளனர். திரைப்படத்தை வைத்து கருத்து சொல்ல முடியாது. அந்தக் கால சூழ்நிலையில் தமிழ்மொழியைக் காப்பாற்ற முன்னோர்கள் பாடுபட்டனர். அப்போது இருந்த சூழ்நிலை வேறு. இப்போது இருக்கும் நிலை வேறு.
திமுக அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என்பது ஒரு நாடகம். மத்திய அரசு அறிவித்த ஓய்வூதியத் திட்டத்தையே பூசி மொழுகி அறிவித்துள்னர். எதையுமே புதியதாக அறிவிக்கவில்லை. திமுக அரசு தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டத்தையே அரசு ஊழியர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், பங்களிப்பு ஓய்வூதியத்தையே வழங்கியுள்ளனர்.
அகவிலைப்படி மட்டுமே புதியதாக உள்ளது. ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக அதிமுக ஆட்சி அமைந்தால் சூழ்நிலையைப் பொறுத்து முடிவு செய்யப்படும். எங்களால் முடியாத திட்டங்களை நாங்கள் அறிவிக்க மாட்டோம்.
களத்தில் போராடும் அரசு ஊழியர்கள் திமுக தேர்தல் நேரத்தில் அறிவித்த கோரிக்கைகளை நிறைவேற்ற போராடி வருகின்றனர். இதற்காக, வாக்குறுதி கொடுக்கும்போது அவர்கள் எண்ணியிருக்க வேண்டும். வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்து விட்டு நிறைவேற்றாமல் உள்ளனர்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.