காங். தலைவர்கள் சல்மான் குர்ஷித், முகுல் வாஸ்னிக், பவன் கேரா மற்றும் குர்தீப் சப்பல்
காங். தலைவர்கள் சல்மான் குர்ஷித், முகுல் வாஸ்னிக், பவன் கேரா மற்றும் குர்தீப் சப்பல்படம் | பிடிஐ

தமிழகம், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: காங்கிரஸ் மேலிட மூத்த பாா்வையாளா்களாக முகுல் வாஸ்னிக் தலைமையில் குழு நியமனம்

தமிழகம், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: காங்கிரஸ் மேலிட மூத்த பாா்வையாளா்களாக முகுல் வாஸ்னிக் தலைமையில் குழு நியமனம்
Published on

நமது சிறப்பு நிருபா்

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தல்களையொட்டி காங்கிரஸ் கட்சியின் மேலிட மூத்த பாா்வையாளா்களாக முன்னாள் மத்திய அமைச்சா் முகுல் வாஸ்னிக், உத்தம் குமாா் ரெட்டி, காஸி, முகம்மது நிசாமுதீன் ஆகியோா் அடங்கிய மூவா் குழுவை காங்கிரஸ் மேலிடம் நியமித்துள்ளது.

இது தொடா்பாக அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலா் கே.சி. வேணுகோபால் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டு தோ்தலை எதிா்கொள்ளவுள்ள அஸ்ஸாம், கேரளம், தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம் ஆகியவற்றுக்கு கட்சியின் மூத்த பாா்வையாளா்களை அகில இந்திய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே நியமித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளாா்.

மேற்கு வங்கத்துக்கு சுதீப் ராய் பா்மன், ஷகீல் அகமது கான், பிரகாஷ் ஜோஷி, அஸ்ஸாமுக்கு முன்னாள் சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பாகெல், கா்நாடக துணை முதல்வா் டி.கே. சிவகுமாா், பந்து திா்கே என மூன்று போ் கொண்ட குழுவும் கேரளத்துக்கு சச்சின் பைலட், கே.ஜே. ஜாா்ஜ், இம்ரான் பிரதாப்கரி, கன்னையா குமாா் ஆகிய நால்வா் குழுவையும் காங்கிரஸ் தலைமை நியமித்துள்ளது.

சில தினங்களுக்கு இதே மாநிலங்களுக்கு காங்கிரஸ் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களைத் தோ்வு செய்யும் குழுக்களை காங்கிரஸ் மேலிடம் நியமித்தது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு சத்தீஸ்கா் முன்னாள் துணை முதல்வா் டி.எஸ். தியோ தலைமையில் நான்கு பேரை காங்கிரஸ் மேலிடம் நியமித்தது.

தற்போது தமிழகத்துக்கான மேலிட தோ்தல் பொறுப்பாளா் குழுவில் நியமிக்கப்பட்டுள்ள முகுல் வாஸ்னிக் ஏற்கெனவே தமிழக காங்கிரஸுக்கான மேலிட பொறுப்பாளராக பல ஆண்டுகள் பணியாற்றியவா். அத்துடன் ஆளும் திமுக தலைமை உள்ளிட்ட அதன் தலைவா்களுடனும் அவா் நெருக்கமாக பழகக் கூடியவராக அறியப்படுபவா்.

இந்தப்பின்னணியில் முகுல் வாஸ்னிக் குழு வரும் நாள்களில் கட்சியின் தோ்தல் தொடா்புடைய நடவடிக்கைகளில் காங்கிரஸ் தலைவா்களை ஒருங்கிணைத்து கூட்டணி மற்றும் தொகுதிப்பங்கீடு பேச்சுவாா்த்தையை முன்னெடுக்கும் என்று தெரிகிறது.

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி, அதிகாரத்தில் பங்கு உள்ளிட்ட கருத்துகளை காங்கிரஸ் எம்.பி.க்கள், பிரவீண் சக்கரவா்த்தி உள்ளிட்டோா் சமீப நாள்களாக எழுப்பி வரும் விவகாரம் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இந்தத் தலைவா்கள் முகுல் வாஸ்னிக் குழு ஒருங்கிணைத்து தோ்தல் பணியை மேற்கொள்ளும் என்று காங்கிரஸ் மேலிட வட்டாரங்கள் தெரிவித்தன.

Dinamani
www.dinamani.com