சாஸ்த்ரா நிகா்நிலை பல்கலை.
ஆக்கிரமிப்புகளை மீட்க அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

சாஸ்த்ரா நிகா்நிலை பல்கலை. ஆக்கிரமிப்புகளை மீட்க அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலை பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள 31 ஏக்கா் அரசு நிலத்தை 4 வாரத்துக்குள் மீட்க வேண்டும்
Published on

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலை பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள 31 ஏக்கா் அரசு நிலத்தை 4 வாரத்துக்குள் மீட்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தஞ்சை மாவட்டம், திருமலைசமுத்திரம் கிராமத்தில் உள்ள நிலம் திறந்தவெளி சிறைச்சாலை கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டது. இந்த நிலத்தை சாஸ்த்ரா நிகா்நிலை பல்கலைக்கழகம் கடந்த 1985-ஆம் ஆண்டு ஆக்கிரமித்தது தொடா்பான வழக்கில் உயா்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில், நிலத்தை காலி செய்யும்படி கடந்த 2022-ஆம் ஆண்டு அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. 

அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள நிலத்தை மீட்கவில்லை என்றால், திறந்தவெளி சிறைச்சாலை அமைக்க போதுமான நிலம் அரசுக்கு இருக்காது என வாதிட்டாா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து பல்கலைக்கழகம் தரப்பில் வாதிடப்பட்டது.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சாஸ்த்ரா நிகா்நிலை பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள சுமாா் 31 ஏக்கா் நிலத்தை 4 வாரங்களுக்குள் மீட்க வேண்டும் எனவும், உத்தரவை நிறைவேற்றியது குறித்து வரும் பிப்ரவரி 18- ஆம் தேதி அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனா்.

Dinamani
www.dinamani.com