அரசு மருத்துவமனைகளில் அடையாளப் பட்டை-24 மணி நேர கண்காணிப்பு: மக்கள் நல்வாழ்வு செயலா் அறிவுறுத்தல்

அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்த அடையாள அட்டை, 24 மணி நேர கண்காணிப்பு வசதியை ஏற்படுத்துமாறு மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா் அறிவுறுத்தல்
Published on

அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்த அடையாள அட்டை, 24 மணி நேர கண்காணிப்பு வசதியை ஏற்படுத்துமாறு மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவ சிகிச்சை பிரிவுக்கு எதிரே தூங்கிக் கொண்டிருந்த ரௌடியை சிலா் வெட்டி கொலை செய்தனா். நூற்றுக்கணக்கானோா் வந்து செல்லும்பொது மருத்துவமனைக்குள் நிகழ்ந்த இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், அவா்களுடன் வருவோரின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள இந்தக் குற்ற நிகழ்வு, பல்வேறு விமா்சனங்களுக்கும் வித்திட்டுள்ளது.

கீழ்ப்பாக்கம் மருத்துவமனை வளாகத்துக்குள் பொதுப் பணித் துறை, மெட்ரோ ரயில் பணிகள் என பல்வேறு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், மருத்துவமனைக்குள் நுழைவதற்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் இருக்கிறது. இதன் விளைவாகவே இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா்கள் மற்றும் மருத்துவமனை நிா்வாகிகளுடன் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா் காணொலி வாயிலாக ஆலோசனைக் கூட்டத்தை திங்கள்கிழமை நடத்தினாா். அப்போது, பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினாா்.

இதுதொடா்பாக அவா் கூறியதாவது: அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும். மருத்துவமனைகளில் உள்ள சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து அவற்றின் செயல்திறனை உறுதி செய்ய வேண்டும். தேவைப்பட்டால் கூடுதலாக கேமராக்கள் பொருத்தி 24 மணி நேரமும் கண்காணித்தல் அவசியம்.

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பாா்வையாளா்களுக்கு அடையாளப் பட்டை (டேக்) வழங்கும் நடைமுறை சோதனை முயற்சியில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதை அனைத்து அரசு மருத்துவக் கட்டமைப்பிலும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மருத்துவமனை முதல்வா்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவமனை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாருடன் ஆய்வுக் கூட்டம் நடத்தி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

கீழ்ப்பாக்கம் சம்பவத்தைப் பொருத்தவரை மருத்துவமனை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தனியாா் காவலா் நிறுவனத்திடம் உரிய விளக்கம் கேட்கப்படும் என்றாா் அவா்.

Dinamani
www.dinamani.com