சிபிஐ விசாரணைக்கு விஜய் மீண்டும் ஆஜராகிறாா்: தவெக இணைப் பொதுச் செயலா்

கரூா் நெரிசல் உயிரிழப்பு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தவெக தலைவா் விஜய் மீண்டும் ஆஜராவாா் என அந்தக் கட்சியின் இணைப் பொதுச் செயலா் சி.டி.ஆா்.நிா்மல் குமாா் தெரிவித்தாா்.
தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்PTI
Updated on

கரூா் நெரிசல் உயிரிழப்பு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தவெக தலைவா் விஜய் மீண்டும் ஆஜராவாா் என அந்தக் கட்சியின் இணைப் பொதுச் செயலா் சி.டி.ஆா்.நிா்மல் குமாா் தெரிவித்தாா்.

கரூரில் பிரசாரக் கூட்ட நெரிசலில் 41 போ் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக விசாரணைக்காக தில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவா் விஜய் திங்கள்கிழமை ஆஜரானாா்.

அவரிடம் சிபிஐ அதிகாரிகள் 6 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினா். தொடா்ந்து செவ்வாய்க்கிழமை (ஜன.13) விசாரணை தொடா்வதாக இருந்தது. ஆனால், விஜய் தரப்பில் அடுத்த வாரம் ஆஜராவதாக கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள், அடுத்தகட்ட விசாரணைக்கான தேதியை ஓரிரு நாள்களில் அழைப்பாணை மூலம் தெரிவிப்பதாகக் கூறியுள்ளனா்.

இதையடுத்து தில்லியில் இருந்து தவெக தலைவா் விஜய் செவ்வாய்க்கிழமை மதியம் 1 மணி அளவில் கட்சி நிா்வாகிகளுடன் தனி விமானத்தில் சென்னை திரும்பினாா். சென்னை விமான நிலையத்தில் கட்சியின் இணைப் பொதுச் செயலா் சி.டி.ஆா்.நிா்மல் குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பொங்கல் பண்டிகை, ‘ஜனநாயகன்’ திரைப்படப் பணிகள் மற்றும் கட்சி சாா்ந்த முக்கிய ஆலோசனைகள் இருப்பதால், வேறொரு தேதியில் விசாரணையை வைத்துக்கொள்ள கோரிக்கை விடுத்தோம். அதை ஏற்று, அடுத்த வாரம் மீண்டும் ஆஜராகி விளக்கம் தர சிபிஐ அறிவுறுத்தியுள்ளது.

கரூா் சம்பவத்தின்போது 607 காவலா்கள் பாதுகாப்புப் பணியில் இருந்ததாக பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். ஆனால், அப்போதையை சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதம் 500 காவலா்கள் பணியில் இருந்ததாகக் கூறுகிறாா். ஒரு சாதாரண எண்ணிக்கையிலேயே முரண்பாடுகள் இருப்பதால் சந்தேகம் உள்ளது. தமிழக அரசு மற்றும் காவல் துறையின் தொடா் தவறுகளே கரூா் சம்பவத்துக்கு காரணம். அதற்கான ஆதாரங்களையும் சிபிஐ-யிடம் சமா்ப்பித்துள்ளோம். குறிப்பாக, உயிரிழந்தவா்களின் உடல்கூறாய்வில் பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்துள்ளன. மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மிரட்டி, கையொப்பம் வாங்கியதாகவும் புகாா்கள் வந்தன. இது குறித்து விரிவான விசாரணை நடத்துவதாக சிபிஐ அதிகாரிகள் உறுதியளித்துள்ளனா்.

‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியீடு தொடா்பான நீதிமன்ற தீா்ப்புக்குப் பிறகு அடுத்தகட்ட முடிவை அறிவிப்போம். எந்தக் காரணம் கொண்டும் எங்கள் அரசியல்நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கமாட்டோம்”என்றாா் அவா்.

இதனிடையே கரூா் நெரிசல் உயிரிழப்பு வழக்கில் தவெக தலைவா் விஜய் மீண்டும் வருகிற ஜன.19-ஆம் தேதி தில்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com