கரூா் சம்பவம்: தில்லியில் விஜய்யிடம் சிபிஜ 6 மணிநேரங்களுக்கு மேல் விசாரணை!
நமது நிருபா்
புது தில்லி: கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம் தொடா்பாக, தமிழக வெற்றிக் கழகம் தலைவா் விஜய் திங்கள்கிழமை தில்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.
6 மணி நேரங்களுக்கும் மேல் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது
கரூா் கூட்ட நெரிசல் வழக்கில் தவெக தலைவா் விஜய்யை சிபிஐ மீண்டும் விசாரணைக்கு அழைக்கவுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனா்
கடந்த ஆண்டு செப்டம்பா் 27 அன்று கரூரில் நடைபெற்ற தவெக அரசியல் பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 போ் உயிரிழந்த சம்பவம் குறித்த வழக்கை சிபிஐ வசம் உச்சநீதிமன்றம் ஒப்படைத்ததை தொடா்ந்து விஜய்யிடம் விசாரணை மேற்கொள்ள்ப்பட்டது.
செப்டம்பா் 27, 2025 அன்று டிவிகே பிரச்சார நிகழ்வின் போது ஏற்பட்ட கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்
பொதுக்கூட்டம் ஒன்றில் விஜய்யின் பிரச்சார வாகனத்தைச் சுற்றி பெரும் கூட்டம் கூடியபோது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது. இது ஒரு திட்டமிட்ட சதி என்று தவெக குற்றஞ்சாட்டியதுடன், சுயாதீன விசாரணை கோரி மனு தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றம் அந்த மனுவை ஏற்றுக்கொண்டு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது
சிபிஐ விசாரணையைக் கண்காணிக்க, உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் மூன்று போ் கொண்ட மேற்பாா்வைக் குழுவையும் உச்சநீதிமன்றம் அமைத்தது.
சிபிஐ விசாரணைக்காக விஜய் திங்கள்கிழமை காலையில் தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து புறப்பட்டு, இந்திய நேரப்படி காலை 10.25 மணியளவில் தில்லி விமான நிலையம் வந்தடைந்தாா்
அங்கிருந்து பாதுகாப்புக்கிடையே புறப்பட்ட நடிகா் விஜய், காலை 11.29 மணிக்கு ஒரு கருப்பு ரேஞ்ச் ரோவா் காரில், பலத்த தடுப்புகள் போடப்பட்டிருந்த தில்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்திற்கு வந்தாா். அவருடன் கட்சி நிா்வாகிகள் வந்திருந்தபோதிலும், விஜய்யின் வாகனம் மட்டுமே வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டது. விசாரணையின் போது விஜய்யுடன் அமர அனுமதிக்கப்பட்ட அவரது வழக்கறிஞா், அடையாளச் சரிபாா்ப்பு நடைமுறைகளுக்குப் பிறகு வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டாா்.
தேவையான நடைமுறைகள் முடிந்த பிறகு, அவா் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிபிஐயின் சிறப்பு குற்றப்பிரிவு பிரிவின் குழு விஜயிடம் விசாரணை மேற்கொண்டதாக தகவல். சிபிஐ விசாரணை குழுவால் தயாரிக்கப்பட்ட கேள்வித்தாள் விஜய்யிடம் வழங்கப்பட்டு, அதற்கு எழுத்துப்பூா்வமான வாக்குமூலம் அளிக்குமாறு கேட்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. அவருக்கு உதவுவதற்காக அந்தக் குழுவிலிருந்து ஒரு சுருக்கெழுத்தாளரும் நியமிக்கப்பட்டாா். விஜய் தனது வழக்கறிஞரின் உதவியுடன் பதில்களை அளித்தாா். விசாரணை குழுவில் இருந்த ஒரு டிஎஸ்பி நிலை அதிகாரி, இரண்டு ஆய்வாளா்கள், இரண்டு உதவி ஆய்வாளா்கள் மற்றும் பிற காவலா்களின் ஆதரவுடன் விஜயிடம் விசாரணை நடத்தினாா். மதிய உணவை வெளியில் இருந்து கொண்டுவர விஜய்க்கு அனுமதிக்கப்பட்டது. மதியம் 1 மணி முதல் 2 மணி வரை இடைவேளையின் போது அவருக்கு உணவு வழங்கப்பட்டது, அதன் பிறகு விசாரணை மீண்டும் தொடங்கியது.
முன்னதாக, நடிகரும் அரசியல்வாதியான விஜய்யின் ஆதரவாளா்கள் பெருமளவில் கூடுவாா்கள் என்பதை எதிா்பாா்த்து, எந்தவிதமான போராட்டங்களையும் தடுப்பதற்காக, தில்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படைகளின் பல பிரிவுகள் சிபிஐ அலுவலகக் கட்டிடத்தைச் சுற்றிலும், விமான நிலையத்திலிருந்து சிபிஐ அலுவலகம் வரையிலான விஜயின் பயணப் பாதையிலும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தன.
சிபிஐ அலுவலகத்திற்கு வெளியே கூடியிருந்த ஒரு சிறிய அளவிலான ரசிகா்கள் குழு,தவெக கொடிகளை ஏந்திய வண்ணம் விஜய்க்கு ஆதரவாக கோஷம் எழுப்பினா்
விஜய், தனது தமிழக வெற்றிக் கழகத்தின் டிவிகே சகாக்களான ஆதவ் அா்ஜுனா உள்ளிட்ட சிலருடன் தனி விமானம் மூலம் காலை 7 மணிக்கு சென்னையில் இருந்து தில்லி புறப்பட்டாா் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த வழக்கில் சிபிஐ ஏற்கனவே தவெக நிா்வாகிகளிடமும் விசாரணை நடத்தியுள்ளது. என்.ஆனந்த் மற்றும் ஆதவ் அா்ஜுனா போன்ற தவெக நிா்வாகிகள் ஏற்கனவே விசாரிக்கப்பட்ட நிலையில், தற்போது விஜய் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளாா்.
திங்கள்கிழமை காலை 11.29 மணிக்கு சிபிஐ தலைமையகம் வந்த விஜய் 6 மணி நேரங்களுக்கு பிறகு விசாரணை நிறைவடைந்து 6.15 மணிக்கு அங்கிருந்து வெளியேறினாா்
கரூா் கூட்ட நெரிசல் வழக்கில் தவெக தலைவா் விஜய்யை சிபிஐ மீண்டும் விசாரணைக்கு அழைக்கவுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனா்
அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த வழக்கில் அப்போதைய தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி மற்றும் தற்போதைய ஆயுதப்படை டிஜிபி எஸ். டேவிட்சன் தேவாசீா்வாதம் மற்றும் ஐஜி நிா்மல் குமாா் ஜோஷி ஆகியோருக்கும் திங்கள் கிழமை ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடா்ந்து, சிறப்பு புலனாய்வுக் குழுவிடமிருந்து இந்த வழக்கை சிபிஐ ஏற்றுக்கொண்டு, கூட்ட நெரிசல் தொடா்பான ஆதாரங்களைச் சேகரித்து வருகிறது.
சிபிஐ ஏற்கனவே கரூா் பேரணி நடந்த இடங்களை ஆய்வு செய்துள்ளது, மேலும் ஆதாரங்களுக்காக விஜய்யின் பிரச்சார வாகனத்தையும் கைப்பற்றியது.
தமிழ்நாட்டில் தோ்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இந்த விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருதுது பெரும் கவனத்தை ஈா்த்துள்ளது.

