

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டம் வருகிற 23-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, பிரதமர் மோடி கலந்து கொள்ளும் கூட்டம் மதுரையில் உள்ள பாண்டிகோயில் அம்மா திடலில் நடத்த திட்டமிடப்பட்டது.
இதையொட்டி, மதுரை பாண்டிகோயில் அருகேயுள்ள அம்மா திடலில் இந்தக் கூட்டத்தை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.
இந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியினர் பங்கேற்கும் ஊர்வலம், பொதுக் கூட்டம் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் யாரெல்லாம் இடம்பெறுவர் என்பதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமியும்தான் முடிவு செய்வார்கள் என்று கூறப்படுகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அன்புமணி தரப்பு பாமக இணைந்துள்ளது. தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்வதாக அந்தக் கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணிக்கு ஓரிரு நாள்களில் புதிய கட்சி ஒன்று வரவுள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் வருகைக்கு முன்பே கூட்டணி இறுதி செய்யப்பட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.