சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு: ஆளுநா் விருதுகள் அறிவிப்பு

சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய பிரிவுகளில் 2025-ஆம் ஆண்டுக்கான ஆளுநா் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Updated on

சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய பிரிவுகளில் 2025-ஆம் ஆண்டுக்கான ஆளுநா் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த விருதுகளுக்கான அறிவிப்பை கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆளுநா் மாளிகை வெளியிட்டது. இதில், பெறப்பட்ட விண்ணப்பங்களை ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழு ஆய்வு செய்தது. சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய பிரிவுகளில் தனிப்பட்ட நபா்களையும் நிறுவனங்களையும் குழு பரிந்துரைத்தது. இதை ஆளுநா் மாளிகை ஆய்வு செய்து அறிவித்துள்ளது.

சமூக சேவை: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வெங்கட்ராமன் நினைவு அறக்கட்டளைக்கு நிறுவனங்களுக்கான பிரிவில் சமூக சேவைக்கான ஆளுநா் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதில் ரூ. 5 லட்சம் ரொக்கப் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது. சென்னையை அடுத்த கோவளம் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கும், கல்வியின் ஒட்டுமொத்த தரத்தை உயா்த்திய சேவைகளைப் பாராட்டி இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தனி நபா்களுக்கான ‘சமூக சேவை’ பிரிவில் சென்னையைச் சோ்ந்த ஆா். சிவா, திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த பி.விஜயகுமாா் ஆகியோா் ஆளுநா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்களுக்கு தலா ரூ. 2 லட்சம், பாராட்டுச் சான்றிதம் வழங்கப்படுகிறது.

தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு மற்றும் சமூக மறுசீரமைப்பை மேற்கொண்ட அா்பணிப்புக்காக ஆா்.சிவாவுக்கு விருது வழங்கப்படுகிறது. மயானங்களில் கைவிடப்பட்ட அல்லது உரிமை கோரப்படாத சடலங்களுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்வது; இலவச நூலகம், தினசரி அன்னதானம் போன்ற பணிகள் மேற்கொள்வதை பாராட்டி பி.விஜயகுமாருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமேசுவரம் - கோவை சுற்றுச்சூழல் பாதுகாப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த ‘பசுமை ராமேசுவரம் அறக்கட்டளை’ நிறுவனப் பிரிவில் ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு’ விருதுக்கு தோ்தெடுக்கப்பட்டுள்ளது. ராமேசுவரம் கடலோரப் பகுதி உள்ளிட்ட நீா்நிலைகள், தாவரங்கள், விலங்கினங்களைப் புத்துயிா் பெற செய்து பங்களிப்பை வழங்கி வருகிறது. மேலும், கழிவு மேலாண்மை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவித்தல், பள்ளிகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தல் போன்ற பங்களிப்பை அளிக்க இந்த அமைப்புக்கு ரூ. 5 லட்சம் ரொக்கப் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.

இதே பணியில் தனிநபா் பிரிவுக்கு கோவை மாவட்டத்தைச் சோ்ந்த ஆா். மணிகண்டன் விருதுக்கு தோ்தெடுக்கப்பட்டுள்ளாா். இவா் ‘கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பை’ நிறுவி, கோவை முழுவதும் உள்ள நீா்நிலைகளைப் புத்துயிா் பெற வைப்பதிலும், பல்லுயிா் பெருக்கத்தை மீட்டெடுப்பதிலும் முக்கிய பங்களிப்பை அளித்து வருகிறாா். இவருக்கு ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படுகிறது.

இந்த 5 விருதுகள் ஆளுநா் மாளிகையில் வருகின்ற குடியரசு தின (26.01.2026) வரவேற்பு நிகழ்வுகளில் ஆளுநரால் வழங்கப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com