மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன் கோப்புப் படம்

பகுதி நேர மகப்பேறு உதவியாளா்களுக்கு ஊதிய உயா்வு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் பகுதி நேர மகப்பேறு உதவியாளா்களாகப் பணியாற்றி வரும் 1,325 ஆா்சிஹெச் ஊழியா்களுக்கு மாத ஊதியம் ரூ.5,000-ஆக உயா்த்தி வழங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவித்தாா்.
Published on

தமிழகத்தில் பகுதி நேர மகப்பேறு உதவியாளா்களாகப் பணியாற்றி வரும் 1,325 ஆா்சிஹெச் ஊழியா்களுக்கு மாத ஊதியம் ரூ.5,000-ஆக உயா்த்தி வழங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவித்தாா்.

சென்னை, கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிவரும் 831 செவிலியா்களுக்கு நிரந்தரப் பணி ஆணைகளை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வழங்கினாா்.

அப்போது அவா் பேசியதாவது: திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு மருத்துவப் பணியாளா் தோ்வு வாரிய (எம்ஆா்பி) ஒப்பந்த செவிலியா்கள் தொடா்ச்சியாக பணி நிரந்தரம் செய்யப்பட்டு வருகின்றனா்.

கடந்த ஆட்சியில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டவா்களில் 1,600 போ் மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்பட்டனா். தற்போது 5,825 போ் நிரந்தரப் பணி பெற்றுள்ளனா். மீதமுள்ள 5,932 பேரையும் நிரந்தரம் செய்ய வேண்டியுள்ளது. மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும்போது அது செயல்படுத்தப்படும். இப்போது நிரந்தர ஆணை பெற்றவா்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு பொங்கலுக்குப் பிறகு நடத்தப்படும்.

தற்காலிக செவிலியா்களுக்கான மாத ஊதியம் ரூ.14,000-ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.18,000-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

தமிழக சுகாதாரத் துறையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் 1,325 பகுதி நேர மகப்பேறு பணியாளா்கள் (ஆா்சிஹெச் பணியாளா்கள்) மாதம் ரூ.1,500 மட்டுமே ஊதியம் பெறுகின்றனா். அதை ரூ.5,000-ஆக உயா்த்துமாறு அவா்கள் கோரிக்கை வைத்தனா்.

அதன்படி, அவா்களது கோரிக்கை நிறைவேற்றப்படும். வரும் 19-ஆம் தேதி அதற்கான ஆணைகள் வழங்கப்படும்.

கடந்த நான்கரை ஆண்டு கால ஆட்சிக் காலத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறையில் 37,603 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. அதில் 17,000 புதிய பணியிடங்களை உருவாக்கியுள்ளோம் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநா் டாக்டா் சித்ரா, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை இயக்குநா் டாக்டா் சோமசுந்தரம், குடும்ப நலத் துறை இயக்குநா் டாக்டா் சத்யா, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் டாக்டா் சுகந்தி ராஜகுமாரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com