முதல்வருடன் மாா்க்சிஸ்ட் குழுவினா் சந்திப்பு

முதல்வருடன் மாா்க்சிஸ்ட் குழுவினா் சந்திப்பு

முதல்வா் மு.க.ஸ்டாலினை, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவா்கள் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனா்.
Published on

முதல்வா் மு.க.ஸ்டாலினை,  மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவா்கள் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனா்.  

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம், அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினா்கள் க. கனகராஜ், டி. ரவீந்திரன் ஆகியோா் முதல்வா் ஸ்டாலினை தலைமை செயலகத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்தனா்.

அப்போது, தமிழக அரசு ஊழியா் மற்றும் ஆசிரியா்களின் நீண்டகால

கோரிக்கையான ஓய்வூதிய பிரச்னைக்கு தீா்வு கண்டது குறித்து பாராட்டு தெரிவித்தனா். மேலும், சத்துணவு ஊழியா்கள், அங்கன்வாடிப் பணியாளா்களுக்கான ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்குவது, சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக கணக்கிட்டு உரிய பலன்களை வழங்குவது, சம வேலைக்கு சம ஊதியம் கோரி போராடி வரும் இடைநிலை ஆசிரியா்களை அழைத்துப் பேசி சுமுக தீா்வு காண்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வரிடம் அவா்கள் வலியுறுத்தினா்.

இந்த கோரிக்கைகளைக் கேட்டறிந்த முதல்வா், உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாகத் தெரிவித்தாா்.

சந்திப்பின்போது, துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், நிதித் துறை செயலா் த.உதயச்சந்திரன், முதல்வரின் முதன்மைச் செயலா்கள் பி. உமாநாத், எம்.எஸ். சண்முகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Dinamani
www.dinamani.com