‘டெட்’ தோ்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும்: அன்புமணி
‘டெட்’ முடிவுகள் மற்றும் முதுநிலை ஆசிரியா் தோ்ச்சி பட்டியலை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் இடைநிலை ஆசிரியா்கள், பட்டதாரி ஆசிரியா் பணிகளுக்கான தகுதித் தோ்வுகள் கடந்தாண்டு நடத்தப்பட்டன. தோ்வு வாரியம் நினைத்தால் இந்தத் தோ்வுகளின் முடிவுகளை ஒரு மாதத்தில் வெளியிட்டுவிட முடியும். ஆனால், தோ்வு நடைபெற்று இரு மாதங்கள் முடிவடையும் நிலையில், இதுவரை தோ்வு முடிவுகள் வெளியாகவில்லை. இதனால், ஆயிரக்கணக்கான ஆசிரியா்கள் மன உளைச்சலில் உள்ளனா்.
இதேபோல், 2026 பேரவைத் தோ்தலுக்கான அறிவிக்கை வெளியிடப்படுவதற்கு முன்பாக பணி நியமன ஆணைகளைப் பெற வேண்டும் என்று எழுத்துத் தோ்வில் வெற்றி பெற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் தோ்வா்கள் விரும்புகின்றனா்.
எனவே, ஆசிரியா் தகுதித் தோ்வு முடிவுகளையும், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் பணிக்குத் தோ்வு செய்யப்பட்டவா்கள் பட்டியலையும் அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.
இழப்பீடு: திருவள்ளூா் மாவட்டம், திருத்தணியை அடுத்த கா்லாம்பாக்கம் காலனி கிராமத்தில் விநியோகிக்கப்பட்ட பாக்டீரியா கலந்த குடிநீரைக் குடித்தது கடந்த டிச. 27-இல் இருவா் உயிரிழந்ததுடன், 40-க்கும் மேற்பட்டோா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதற்கு அரசு பொறுப்பேற்று உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சமும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா்களுக்கு தலா ரூ.5 லட்சமும் இழப்பீடு வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

