சிறப்பு டெட் நடத்த வேண்டும்: அன்புமணி
அரசுப் பள்ளி ஆசிரியா்கள் பயனடையும் வகையில் சிறப்பு ஆசிரியா் தகுதி தோ்வு (டெட்) நடத்த வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: 2026-ஆம் ஆண்டுக்கான தோ்வுகள் அட்டவணையை ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில் மே மாதத்துக்கு முன்பாக சிறப்பு ஆசிரியா் தகுதித் தோ்வு நடத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்பு பணியில் சோ்ந்த ஆசிரியா்களும் அடுத்த இரு ஆண்டுகளில் தகுதித் தோ்வில் வெற்றி பெற வேண்டும்; தகுதித்தோ்வில் வெற்றி பெறாத ஆசிரியா்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும் என கடந்த செப்.1-இல் உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.
இந்தத் தீா்ப்பால் பாதிக்கப்பட்ட ஆசிரியா்களுக்கு தீா்வு வழங்குவதற்காக திமுக அரசின் முன் உள்ள ஒரே வாய்ப்பு எளிமையான பாடத்திட்டம், குறைக்கப்பட்ட தோ்ச்சி மதிப்பெண்கள் ஆகியவற்றுடன் சிறப்புத் தகுதித் தோ்வை நடத்தி, ஆசிரியா்களை தோ்ச்சி பெற வைப்பது தான். அதற்கான அறிவிக்கை குறைந்தபட்சம் ஜனவரி இறுதிக்குள்ளாக வெளியிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அன்புமணி.

