ஜனநாயகனுக்கு தொடரும் சிக்கல்! மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கைச் சான்று வழக்கில் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...
ஜனநாயகன்...
ஜனநாயகன்...
Updated on
1 min read

ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கைச் சான்று பெறுவது தொடர்பான வழக்கில் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கே.வி.என். புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரித்து இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய்யின் கடைசிப் படமாக உருவாகியுள்ள ஜன நாயகன், பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 9 ஆம் தேதி வெளியாகவிருந்தது. இந்தப் படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டதால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.

தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்‌ஷன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தனி நீதிபதி பி.டி. ஆஷா, உடனடியாக யு/ஏ தணிக்கைச் சான்றிதழ் வழங்க கடந்த வாரம் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோா் அமர்வில் தணிக்கை வாரியம் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து, வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை ஜன. 20 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வின் தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அவசர வழக்கை தாக்கல் செய்தது.

இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சமன்ற நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (ஜன.15) காலை விசாரித்தது.

தயாரிப்பாளர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, “இது பட வெளியீடு தொடர்பான வழக்கு. 5000 திரையரங்குகள் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால், மக்கள் காத்திருக்க முடியாது. அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்” என வாதிட்டார்.

எதிர்த்தரப்பில் ​​மத்திய தணிக்கை வாரியம் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.

இதற்கு பதிலளித்த நீதிபதி தீபங்கர் தத்தா, “அனைத்து நீதிபதிகளும் வழக்குகளை தாக்கல் செய்த ஓரிரு நாள்களுக்குள் தீர்த்து வைப்பதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், இது எல்லா வழக்குகளிலும் நடக்க வேண்டும்.

உயர்நீதிமன்ற அமர்வு இந்த வழக்கை ஜனவரி 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருப்பதால், இதை உயர் நீதிமன்ற அமர்வு விசாரித்து முடிவெடுக்க வேண்டும். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியமில்லை. அதனால், இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாக” நீதிபதி உத்தரவிட்டார்.

Summary

Supreme Court refuses to intervene in controversy over release of Vijay film Jana Nayagan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com