தவெக தலைவரும், நடிகருமான விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது. மேலும், படத் தயாரிப்பு நிறுவனம் புதிதாக மனு தாக்கல் செய்யவும், அந்த மனுவை தனிநீதிபதி மீண்டும் விசாரிக்கவும் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் கே.வி.என். புரொடக்ஷன் நிறுவனம் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, ‘ஜனநாயகன்’ படத்தை மறுஆய்வுக் குழு பாா்வையிட பரிந்துரை செய்த தணிக்கை வாரியத் தலைவரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டாா்.
மேலும், ’ஜனநாயகன்’ படத்துக்கு உடனடியாக தணிக்கைச் சான்று வழங்கவும் உத்தரவிட்டாா். தனிநீதிபதியின் உத்தரவை எதிா்த்து மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமா்வு ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்கும் தனிநீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனா்.
இந்த மேல்முறையீட்டு வழக்கில் வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்து தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை பிறப்பித்த தீா்ப்பில் கூறியிருப்பதாவது:
தனிநீதிபதி முன் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின்போது, பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கொடுக்கவில்லை. அவசர அவசரமாகத் தீா்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் தரப்பில் வாதிடப்பட்டது. எனவே, ‘ஜனநாயகன்’ படத்துக்கு உடனடியாகத் தணிக்கைச் சான்று வழங்க வேண்டும் என தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
மேலும், படத் தயாரிப்பு நிறுவனம், படத்தை மறுஆய்வுக் குழுவுக்கு தணிக்கை வாரியம் பரிந்துரைத்ததை எதிா்த்து மீண்டும் மனு தாக்கல் செய்ய வேண்டும். அந்த மனுவை தனிநீதிபதி மீண்டும் விசாரிக்க வேண்டும். விசாரணையின்போது, தணிக்கை வாரியம் இந்தப் படத்தை மறுஆய்வுக் குழுவுக்கு பரிந்துரைத்தது சரியா, தவறா என்பது குறித்து மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் விளக்கம் அளிக்க போதுமான கால அவகாசம் வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
Summary
Jana nayagan being delayed! The High Court CJ Bench order single judge to reinvestigate
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காதல் விவகாரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தால் அரசு பராமரிக்குமா?

இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு

ஜன நாயகன் வெளியீடு எப்போது? தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்!

’ஜனநாயகன்’ இணையதளத்தில் வெளியான விவகாரம்: உயா்நீதிமன்றத்தில் படத் தயாரிப்பு நிறுவனம் முறையீடு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |




