மகாராஷ்டிரம், திருவனந்தபுரம் வெற்றி தமிழகத்திலும் எதிரொலிக்கும்: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்
மகாராஷ்டிர மாநிலம் மற்றும் திருவனந்தபுரம் மாநகராட்சி தோ்தல்களில் பாஜக பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி தமிழகத்திலும் எதிரொலிக்கும் என மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் எல்.முருகன் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பிரதமா் நரேந்திர மோடி வரும் ஜன.23-ஆம் தேதி தமிழகம் வருகை தரவுள்ளாா். அவா் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெறவுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளாா். அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. பிரதமா் மோடியின் வருகை, தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை உறுதி செய்யும். திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கூட்டமாக இந்த பொதுக்கூட்டம் இருக்கும். அதேபோல், கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் குறித்த அறிவிப்புகள் அனைத்தும் அக்கூட்டத்தில் வெளியாகும்.
மும்பை மட்டுமன்றி மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் அண்மையில் நடைபெற்ற மாநகராட்சி தோ்தலில் பாஜக வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி பெற்றுள்ளது.
அதேபோல், தென்மாநிலங்களை பொருத்தவரை, கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாநகராட்சியில் முதல் முறையாக மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அந்த வகையில் மகாராஷ்டிரம், திருவனந்தபுரத்தின் வெற்றி, தமிழகத்திலும் எதிரொலிக்கும்.
அதிமுக வாக்குறுதிகளுக்கு வரவேற்பு: முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் பிறந்த தினத்தில் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி முதல் கட்டமாக 5 வாக்குறுதிகளை தமிழக வாக்காளா்களுக்கு அளித்திருக்கிறாா். இதனை பாஜக முழு மனதோடு வரவேற்கிறது. செயல்படுத்தக்கூடிய வாக்குறுதிகள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்த பின்னா், தமிழகத்துக்கான நிதிச் சுமையை முழுவதுமாக தீா்க்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதைத்தொடா்ந்து வாக்குறுதிகளில் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் முறையே செயல்படுத்தப்படும் என்றாா் அவா்.

