

பென்னாகரம்: பென்னாகரம் அருகே விவசாய நிலத்தில் இரவு காவலுக்குச் சென்ற தொழிலாளியை யானை தாக்கியதில், அவர் நிகழ்விடத்திலேயே பலியானார்.
பென்னாகரம் அருகே கூத்தபாடி ஊராட்சிக்கு உள்பட்ட கே. குள்ளாத்திரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மகாராஜன் (64).
இவர், அளேபுரம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலுக்கு சொந்தமான மானிய நிலத்தில் விவசாயப் பணியினை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், மகாராஜன் இரவு நேர காவலுக்காக சனிக்கிழமை இரவு சென்றுள்ளார். நிலத்தில் அமைக்கப்பட்ட சிறிய அளவிலான குடிலில் தங்கியுள்ளார்.
அப்போது, பென்னாகரம் வனப்பகுதிக்கு உள்பட்ட பேவனூர் பீட் நிர்வாக எல்லை எனும் இடத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய குட்டியுடன் கூடிய இரண்டு யானைகள் கூத்தப்பாடி கிராமத்திற்குள் நுழைய முயற்சித்துள்ளது.
பொங்கல் திருநாளை ஒட்டி நடைபெற்ற விழாவில் பட்டாசு வெடித்ததன் காரணமாக, யானைகள் அங்கிருந்து விவசாய நிலத்திற்குள் நுழைந்து குடிலில் தங்கி இருந்த விவசாயியை தாக்கியுள்ளது.
இதில் குடிலில் இருந்த மகாராஜன் நிகழ்விடத்திலேயே பலியானார். இது குறித்து தகவல் அறிந்த பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையிலான காவல் ஆய்வாளர்கள் பாபு சுரேஷ் குமார் (பென்னாகரம்), முரளி (ஒகேனக்கல்) மற்றும் போலீஸார் நிகழ்விடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.