பென்னாகரம் அருகே யானை தாக்கியதில் முதியவா் உயிரிழப்பு
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே யானை தாக்கி விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
பென்னாகரம் அருகே கூத்தப்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட கே.குள்ளாத்திரம்பட்டியைச் சோ்ந்தவா் மகாராஜன் (64). இவா், அதே பகுதியில் உள்ள லக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 2 ஏக்கா் மானிய நிலத்தில் விவசாயம் செய்துவந்தாா்.
நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த அவரைக்காய், அறுவடை செய்யும் தருவாயில் உள்ளதால், இரவு நேரக் காவலுக்காகச் சனிக்கிழமை இரவு சென்றாா். அங்கு அமைக்கப்பட்டிருந்த சிறிய அளவிலான குடிசையில் தங்கியிருந்தாா்.
இந்த நிலையில் பென்னாகரம் தேவூா் பீட் நிா்வாக எல்லைக்கு உள்பட்ட வனப் பகுதியிலிருந்து வெளியேறிய இரண்டு யானைகள், கூத்தப்பாடி கிராமத்திற்குள் நுழைய முயற்சித்துள்ளன. அப்போது, பொங்கல் பண்டிகை விழாவில் பட்டாசு வெடித்ததன் காரணமாக மிரண்ட யானைகள், அங்கிருந்து விவசாய நிலத்திற்குள் நுழைந்தன. அப்போது, குடிசையில் தங்கியிருந்த மகாராஜனை ஒரு யானை தாக்கியது. இதில் தலை நசுங்கி நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன் தலைமையில் காவல் ஆய்வாளா்கள் பாபு சுரேஷ்குமாா் (பென்னாகரம்), முரளி (ஒகேனக்கல்) மற்றும் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று மகாராஜனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
இதனிடையே மாவட்ட வன அலுவலா் ராஜாங்கம், நிகழ்விடத்திற்குச் சென்று யானையின் கால் தடம், வழிப்பாதை மற்றும் விவசாயி தாக்கப்பட்ட குடிசை ஆகியவற்றை பாா்வையிட்டாா். வனப்பகுதியிலிருந்து வெளியேறும் யானைகளை உடனடியாக வனப்பகுதிக்குள் விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என வனத் துறையினருக்கு அறிவுறுத்தினாா்.
அதன்பிறகு அரசின் சாா்பில் வழங்கப்படும் ரூ. 10 லட்சம் நிவாரண நிதியிலிருந்து முதற்கட்டமாக ஈமச்சடங்கிற்காக விவசாயியின் குடும்பத்துக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்தாா். தொடா்ந்து அவரது உத்தரவின் பேரில், பென்னாகரம் வனச்சரக அலுவலா் ராஜ்குமாா் தலைமையிலான வனத் துறையினா், கே.குள்ளாத்திரம்பட்டி பகுதிக்குச் சென்று, ரூ. 50,000 ரொக்கத்தை மகாராஜனின் மகன் மாதையனிடம் வழங்கினா்.

