

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருக்கும் பராசக்தி திரைப்படத்தை பார்த்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டியுள்ளார்.
ஹிந்தி திணிப்புக்கு எதிராக இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான பராசக்தி திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த திரைப்படத்தை பார்த்த சீமான், சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சீமான் பேசியதாவது:
“தமிழ் திரைப்படத்தில் தமிழ் வாழ்க என்ற சப்தம் கேட்பது எனக்கு நிறைவாகவும் வியக்கத்தக்கதாகவும் உள்ளது. படத்தின் இறுதியில் சிவகார்த்திகேயன் கையை உயர்த்தி தமிழ் வாழ்க என்று கத்தியது நானே கத்துவது போன்று இருந்தது.
ஒவ்வொருவருக்கும் அவர்களது மொழி முக்கியது, விரும்பினால் எந்த மொழியையும் கற்போம் என்று படத்தின் கருத்தாக உள்ளது. தமிழகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ராணுவத்துக்கு செல்வோர்கள் அங்கு சென்றபிறகு ஹிந்தி கற்றுக் கொள்கிறார்கள். மொழித் தேவைப்படும்போது கற்றுக் கொள்கிறார்கள். தேவைப்படும்போது எம்மொழியையும் கற்றுக் கொள்ளலாம். அது அவரவர் உரிமை, ஆனால், கட்டாயம் கற்றுக் கொள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது.
இதுதான் மொழிப் போராட்ட வரலாறு கிடையாது. இன்னும் நிறைய இருக்கிறது, அதுதொடர்பான புத்தகங்களை படித்து தெரிந்து கொள்ளவேண்டும். உண்மையான மொழிப் போராட்டத்தை படமாக்கினால் அது திரைக்கே வராது.” எனத் தெரிவித்தார்.
மேலும், செழியன் கதாபாத்திரம் குறித்து செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த சீமான், “நான்தான் செழியன், கதாபாத்திரத்தின் பெயரை செழியன் என்று வைத்துவிட்டார்கள்” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.