சென்னை நுங்கம்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிநேர ஆசிரியர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக அரசுப் பள்ளிகளில் தையல், ஓவியம், கணினி, உடற்கல்வி, தோட்டக் கலை, கட்டடக்கலை உள்ளிட்ட பல்வேறு பாடப் பிரிவுகளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியா்கள் 2012-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டனா். தொடக்கத்தில் இவா்களுக்கு மாத ஊதியமாக ரூ. 5,000 நிா்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது இவா்களுக்கு மாத ஊதியமாக ரூ.12,500 வழங்கப்படுகிறது.
சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் ஆகியவற்றை வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியத்தை ரூ.12,500-லிருந்து ரூ. 15,000 ஆக உயர்த்தப்படுவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொங்கலுக்கு முன்னதாக அறிவித்தார். மேலும் கடந்த 13 ஆண்டுகளாக அவா்களுக்கு மே மாதத்தில் (விடுமுறை காலத்தில்) ஊதியம் வழங்கப்படாத நிலையில், இனி அந்த மாதத்தில் ரூ.10,000 வழங்கப்படும் என்றும் அவா் தெரிவித்தார்.
எனினும் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆசிரியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் காவல்துறையினர் அவர்களைக் கைது செய்துள்ளனர்.
பின்னர், பகுதிநேர ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சுவார்த்தை நடத்தினார். பணி நிரந்தரம் பற்றி முதல்வர்தான் முடிவெடுப்பார் என்று தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
இதேபோல சம வேலைக்கு சம ஊதியம் கோரி தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களும் இன்று 25-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இடைநிலை ஆசிரியர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று சென்னை எழும்பூரில் உள்ள மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்திய 400க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இன்று சென்னை கோட்டை ரயில் நிலையம் அருகே போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.