

அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியின் சென்னை பசுமைவழி இல்லத்துக்கு, தமிழக பாஜக தோ்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் இன்று காலை வருகை தந்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி வீட்டில் இன்று காலை அவருக்கு விருந்தளிக்கப்படுகிறது. காரசாரமாக காலை விருந்துடன் அதிமுக - பாஜக இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையும் நடத்தப்படுகிறது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதமா் மோடி தமிழகத்துக்கு வெள்ளிக்கிழமை வருகை தரவிருக்கும் நிலையில், அதற்குள் தோ்தல் கூட்டணியை இறுதி செய்து கூட்டணித் தலைவா்களை ஒரே மேடையில் பங்கேற்க வைக்க தமிழக பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அதன் அடிப்படையிலேயே நேற்று அமமுக இணைப்பு நடந்தது, இன்று எடப்பாடி பழனிசாமியுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி கிட்டத்தட்ட இறுதிசெய்யப்பட்டிருக்கும் நிலையில், இன்று தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது. இந்த விருந்தில், நயினார் நாகேந்திரன், எல். முருகன், வானசி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பாஜக தலைவர்களும், அதிமுக சார்பில் எஸ்.பி. வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், கே.பி. முனுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
தமிழக பேரவைத் தோ்தல் ஒரு சில மாதங்களில் நடைபெறவிருக்கும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியை விரிவுபடுத்தும் பணியை அதிமுகவும், பாஜகவும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
அதன் ஒருப்படியாக, டி.டி.வி.தினகரனை தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டுவந்தால் டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் திமுகவுக்கு சவாலாக அமையும் என பாஜக, அதிமுகவில் இரண்டாம் கட்டத் தலைவா்கள் தங்களது கட்சித் தலைமையிடம் தொடா்ந்து மறைமுகமாக அழுத்தம் கொடுத்து வந்தனா்.
இந்த நிலையில்தான், சென்னையில் புதன்கிழமை தமிழக பாஜக தோ்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் மற்றும் அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன் சந்திப்பின்போது கூட்டணி உடன்பாடு எட்டப்பட்டது.
தற்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் அன்புமணியின் பாமக, அமமுக இணைந்துள்ள நிலையில், இன்று அதிமுக - பாஜக இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.