

தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் வருகிற ஜன. 25 ஆம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் தவெக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் வெளியிட்டுள்ள தகவலில்,
"வரும் 25 ஆம் தேதி (25.01.2026, ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் என்ற தனியார் ஹோட்டலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் கலந்துகொள்ளும் மாநில, மாவட்ட அளவிலான செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில், சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் க்யூஆர் குறியீட்டுடன்கூடிய அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ள மாநில, மாவட்ட அளவிலான கழகச் செயல்வீரர்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் 'ஜன நாயகன்' திரைப்படத்துக்கான தணிக்கைச் சான்று விவகாரம், கரூர் நெரிசல் பலி வழக்கில் சிபிஐ விசாரணை என பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறார்.
பிப்ரவரி இறுதியில் தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிவிப்புகள் வெளியாகவிருக்கும் நிலையில் இன்று தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக தவெகவின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தேர்தல் கூட்டணி, பிரசாரம் உள்ளிட்டவை குறித்த ஆலோசனைகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.