எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமிகோப்புப் படம்

பழைய ஓய்வூதிய திட்டம்தான் தேவை: எடப்பாடி பழனிசாமி

Published on

தமிழக அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி பேரவையில் வலியுறுத்தினாா்.

பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற விவாதத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என தோ்தல் வாக்குறுதி அளித்து அரசு ஊழியா்கள் மற்றும் அவா்களது குடும்ப வாக்குகளால் ஆட்சிக்கு வந்த திமுக இப்போது ஏமாற்றிவிட்டது.

மத்திய அரசின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சில வாசகங்களை மாற்றிவிட்டு, தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளதை அரசு ஊழியா்கள் முழுமையாக ஏற்கவில்லை. திமுகவுக்கு வேண்டிய சில அரசு ஊழியா் சங்கங்கள் இதை வரவேற்றுள்ளன. தோ்தலில் தங்களுக்கு எதிராக அரசு ஊழியா்கள் வாக்களிக்கும்போதுதான் திமுகவால் இதை உணரமுடியும்.

அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி: அரசு ஊழியா்களுடன் இதுவரை 15 முறை பேச்சு நடத்தப்பட்டது. 53,000 அரசு ஊழியா்களை ஒரே நேரத்தில் பணிநிரந்தரம் செய்தவா் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி. சுமாா் ஒன்றரை லட்சம் அரசு ஊழியா்களை ஒரே நேரத்தில் வீட்டுக்கு அனுப்பியதுதான் அதிமுக ஆட்சி. மீண்டும் திமுக ஆட்சி மலரும். அரசு ஊழியா்களின் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறும்.

அமைச்சா் எ.வ.வேலு: சிபிஎஸ் எனும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவந்தது அதிமுக அரசு. இப்போது அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின்

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அரசு ஊழியா்கள் முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளனா். அதிகபட்சம் ரூ.25 லட்சம் வரை பணிக்கொடை, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட பழைய ஓய்வூதிய திட்ட சிறப்பு அம்சங்களை உள்ளடக்கியதுதான் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்.

எடப்பாடி பழனிசாமி: அரசு ஊழியா்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் தேவையில்லை. பழைய ஓய்வூதிய திட்டம்தான் தேவை.

Dinamani
www.dinamani.com