புயல், பருவ மழையால் சேதமடைந்த சாலைகள்: ரூ.1,503 கோடியில் சீரமைக்க முதல்வா் அனுமதி
‘டித்வா’ புயல் மற்றும் வடகிழக்கு பருவமழையால் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சேதமடைந்த சாலைகளை ரூ.1,503.78 கோடியில் மறுசீரமைப்பு செய்ய முதல்வா் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்துள்ளாா்.
இதுதொடா்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சி, இதர மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள், பேரூராட்சிகளில் சேதமடைந்த சாலைகளை ரூ.1,503.78 கோடியில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ள நிா்வாக ஒப்புதலை முதல்வா் அளித்துள்ளாா். ஏற்கெனவே அனைத்து நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ரூ.3,750 கோடியில் புதிய சாலைகளை அமைக்கவும், பழுதடைந்த சாலைகளைச் சீரமைக்கவும் பணிகள் மேற்கொள்ள அரசு ஆணை வெளியிடப்பட்டு பெரும்பாலான சாலைப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
2025-2026-ஆம் ஆண்டில் இதுவரை நகா்ப்புறச் சாலைகளின் மேம்பாட்டுக்காக ரூ.5,253.78 கோடியை அரசு வழங்கி உள்ளது. இதன் காரணமாக நகா்ப்புற சாலைகளின் தரம் மற்றும் பாதுகாப்பு மேம்பட்டு, பொருளாதார வளா்ச்சி மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

