திமுகவுக்கு இது இறுதித் தேர்தல் என்றும் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொள்ள பிரதமர் மோடி தமிழகத்துக்கு வருகை தந்துள்ளார்.
இந்த கூட்டத்தில் பாஜக தலைவர்கள், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சியின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
"இந்தியாவே இன்று மதுராந்தகத்தை நோக்கி பார்த்துக்கொண்டிருக்கிறது. பிரதமர் என்ன பேசுவார் என்று நாடே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
பிரதமர் மோடி தமிழகம் வந்ததும் இயற்கையே சூரியனை மறைத்துவிட்டது. எங்களும் மக்கள் வெள்ளம், மக்கள் கடல்போல காட்சியளிக்கிறார்கள். இதுவே இந்த கூட்டணியின் வெற்றிக்குச் சான்று.
உரிய இடத்தையும் காலததையும் தேர்ந்தெடுத்து செயல்பட்டால் உலகத்தையே ஆளலாம். நமக்கும் அதுக்கான காலம் வந்துவிட்டது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் ஊழல் இல்லாத துறையே கிடையாது. மக்களை வாட்டிவதைக்கும் அரசு தேவையா? ஒரு குடும்பம் வாழ 8 கோடி மக்களை சுரண்டுவது நியாயமா? நான்கே முக்கால் ஆண்டுகளில் திமுக கொடுத்தது துன்பம், வேதனைதான்.
மு.க. ஸ்டாலின் இந்த நான்கே முக்கால் ஆண்டுகளில் அவர் செய்தது ஒன்றே ஒன்றுதான் ஊழல்.
ஸ்டாலின் குடும்பம் மிகப்பெரிய பணக்கார குடும்பமாக இருக்கிறது. ஸ்டாலினுக்கு பிறகு முதல்வராக உதயநிதி வர வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் திமுகவில் உழைத்தவர்கள் தெருவில் இருக்கிறார்கள்.
எந்தவொரு தகுதியும் இல்லாத உதயநிதிக்கு முதலில் எம்எல்ஏ, அமைச்சர், தொடர்ந்து துணை முதல்வர் ஆக்கியிருக்கிறார்கள்.
இனி எந்த தேர்தலிலும் திமுக வெற்றி பெறாது. திமுகவுக்கு இது இறுதித் தேர்தல். தீய சக்தி திமுகவை வீழ்த்துவோம். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றுவோம்.
எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணி, வலிமையான கூட்டணி. தேர்தல் எனும் இந்த போரில் கூட்டணி கட்சித் தலைவர்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றிக்கொடி நாட்டுவோம்.
குடும்ப வாரிசுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற தேர்தல், குடும்ப ஆட்சிக்கு ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்டுகிற தேர்தல். வரும் தேர்தலில் 210 இடங்களில் எங்கள் கூட்டணி வெல்லும். அதிமுக ஆட்சியமைக்கும்.
அதிமுக ஆட்சியில் மத்திய அரசு அனுமதியளித்த காவிரி நதிநீர் தூய்மைப்படுத்தும் திட்டத்தை திமுக அரசு செயல்படுத்தவில்லை. கரோனா போன்ற காலங்களில் மக்களின் உயிரைக் காப்பாற்றியவர் பிரதமர் மோடி" என்று பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.